ஈமச்சடங்கு உதவித்தொகை பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி. இவரது மனைவி ராணி 29.07.2023 அன்று இறந்து விட்டதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமக்கடன் மற்றும் இயற்கை மரண உதவி தொகை ரூ. 22,500 பெற கடந்த 03.10.2023 ம் தேதி போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த மனு சம்மந்தமாக நாராயணசாமியின் மனு சீனியாரிட்டி படி வந்துள்ளது என கிராம உதவியாளர் ராஜேந்திரன் நாராயணசாமிக்கு போனில் தொடர்பு கொண்டு தன்னை நேரில் வந்து பார்க்கும்படி கூறியுள்ளார்.
அதன்படி நாராயணசாமி கிராம நிர்வாக அலுவலகம் சென்று கிராம உதவியாளர் ராஜேந்திரனை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது கிராம உதவியாளர் ராஜேந்திரன் தனக்கு ரூ. 1500 லஞ்ச பணம் கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் கொழாவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் ராஜேந்திரனுக்கு நாராயணசாமியிடம் ரசாயனம் தடவிய ரூ. 1500 பணம் கொடுத்தார். அதை ராஜேந்திரன் பெறும் போது மறைந்திருந்து தீவிர கண்காணிப்பில் இருந்த டிஎஸ்.பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கையும் களவுமாக கிராம உதவியாளர் ராஜேந்திரனை பிடித்து, அவரை கைது செய்து போளூர் தாலுகா அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் ராஜேந்திரனை அடைத்தனர்.