Close
பிப்ரவரி 23, 2025 4:12 மணி

நிலம் அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: நாமக்கல்லில் சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

கைது - மாதிரி படம்

நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். அவரது மாமியார், தனது மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்க, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பம், நாமக்கல் வட்டாட்சியருக்கு ஆன்லைன் மூலம் சென்றுள்ளது. வட்டாட்சியர்  அலுவலகத்தில் இருந்து இந்த நிலம் தொடர்பாக விசாரித்து ஒப்புதல் வழங்க, நில அளவையர்  அசோக்குமார் (33), அணியார் கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமி (56) ஆகியோருக்கு, ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட நில அளவையர் அசோக்குமார், நிலம் அளவீடு செய்ய ரூ. 5,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத திருமுருகன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதையடுத்து, காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5,000 பணத்தை கொடுக்க ஆலோசனை வழங்கினர். இதற்கிடையில், திருமுருகனை தொடர்பு கொண்ட கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமி, தன்னிடம் ரூ. 5,000 கொடுக்குமாறும், அதை சர்வேயர் அசோக்குமாரிடம் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு, திருமுருகன், கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமியிடம் ரூ. 5,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சுபாஷினி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அப்போது, அவர் நில அளவையர் அசோக்குமார் சொன்னதால் வாங்கினேன் என போலீசாரிடம், வேலுசாமி தெரிவித்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், நாமக்கல்லில் நில அளவையர் அசோக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து நில அளவையர்அசோக்குமார், வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அதிகாரிவேலுசாமி ஆகியோரிடம் லஞ்ம ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top