நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல், தென்பாண்டியன் குரூப் நிறுவனங்களின் சேர்மன் நல்லுசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பின் 5-ம் இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் நம் நாடு 3ம் இடத்திற்கு முன்னேறும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் காரணமாக வணிகம் பன்னாட்டு அளவில் பெருகிவிட்டது.
இதன் காரணமாக வணிகவியல் துறை மாணவிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சிஏ, ஐசிஎம்ஏ, ஏசிஎஸ் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், மாணவிகள் தொழில் முனைவோராக உருவாகி, சொந்தமாக தொழில் நடத்திட தற்போது ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, அதை மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு தொழில் அதிபர்களாக உருவாக வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் சசிகலா, ஐஐசி ஒருங்கிணைப்பாளர் விஜயசாரதி உட்பட வணிகவியல்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஷிவானிஸ்ரீ வரவேற்றார். தஹானி நவீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் சித்தார்த்தி நன்றி கூறினார்.