Close
பிப்ரவரி 23, 2025 3:32 மணி

செலுத்திய கல்விக் கடனை மீண்டும் கேட்டதற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவின் பேரில் இழப்பீடு வழங்கிய அரசு வங்கி

கல்விக் கடன் செலுத்திய பிறகும் தனியார் ஏஜென்சி மூலம் கல்விக் கடனை செலுத்தும்படி வற்புறுத்திய குற்றத்திற்காக, நுகர்வோர் நீதிமன்ற உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு வங்கி, ரூ. 5 லட்சம் இழப்பீடு மற்றும் வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கியது.
திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் அருண்பிரசாத் (35). இவர் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் திருச்செங்கோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.2,57,000 கல்வி கடன் பெற்றுள்ளார்.

இந்தக் கடனை கடந்த 2017ம் ஆண்டு அருண்பிரசாத் செலுத்தி கடன் முடிக்கப்பட்டிற்கான சான்றிதழையும் வங்கியில் இருந்து பெற்றுள்ளார். இந்நிலையில் வங்கி நிர்வாகம் அவரது கடனை வாராக்கடனாக அறிவித்து, தனியார் ஏஜென்சியிடம் கொடுத்துள்ளது.

தனியார் ஏஜென்சியினர் அருண்குமாரிடம் ரூ.7 லட்சம் வங்கிக் கடன் செலுத்த வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மனோகரன் மற்றும் அவரது மகன் அருண்பிரசாத் ஆகிய இருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த கோர்ட் வங்கியின் சேவை குறைபாடே இப்பிரச்சினைக்கு காரணம், எனவே வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை வங்கி வழங்க வேண்டும். மேலும் முடிக்கப்பட்ட கடன் கணக்கை தனியார் ஏஜென்சிக்கு நிறுவனத்திற்கு விற்பனை செய்தது தவறு என்று கடிதம் வழங்கவும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் வங்கிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மனோகரன் மற்றும் அருண்பிரசாத் ஆகியோருக்கு நீதிமன்ற உத்திரவுப்படி, வங்கி கிளையின் மூலம் ரூ.5 லட்சம் பணம் மற்றும் வருத்தம் தெரிவித்தும் கடிதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top