திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தனியாா் மண்டபத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள், ஒப்பந்ததாா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம், பராத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், நபாா்டு வங்கி மூலம் நடைபெறும் பணிகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு செய்து கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடி பள்ளி குழந்தைகளின் கற்றல் மற்றும் வாசித்தல் திறன் கணக்கு கூட்டல் மற்றும் கழித்தல் திறன்களை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உள்கட்ட அமைப்பு , கழிப்பறை வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, லட்சுமி, சக்திவேல், செந்தில், அண்ணாமலை, மணிகண்டன், கல்விக்கரசி, பிரபு, பிச்சாண்டி, வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ராஜராஜேஸ்வரி, ஜெயவேல் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.