மக்களுடன் முதல்வர் 3ம் கட்ட சிறப்பு முகாம்களில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு 295 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டி, காரைக்குறிச்சி, கட்டணாச்சம்பட்டி, தொட்டிவலசு மற்றும் முள்ளுக்குறிச்சி கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 295 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசியதாவது:
அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிராம ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் முகாம் 3-ம் கட்டமாக நடத்த உத்தரவிடப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.
அரசு அலுவலகங்களைத் தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, மக்களைத் தேடி அரசு அலுவலர்கள் செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது, பொதுமக்கள் அதிக அளவில் அணுகும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசு துறைகள் சார்ந்த 44 வகையான சேவைகள் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக பெற்று பயனடைய வேண்டும் என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, அட்மா குழுத்தலைவர்கள் எருமப்பட்டி பாலசுப்ரமணியன், புதுச்சத்திரம் கவுதம், வெண்ணந்தூர் துரைசாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வன பாதுகாவலர் காலநிதி, ஆர்டிஓ பார்தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.