Close
பிப்ரவரி 28, 2025 9:48 மணி

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் , பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் அருளை வேண்டி வழிபாடு செய்யக்கூடிய மிக முக்கிய நாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வரும் நிலையில், சிவபெருமானை வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

மதுரை கோவில்களில் சிவராத்திரி ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு , 1008 சங்காபிஷேகம் கோவில் வளாகம் கொடி மரம் அருகில் உள்ள நந்தி மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு அதில் புனித நீர் மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது .
மேலும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன . இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்கிட புனித நீர் குடங்கள் கொண்டும், பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சங்குகளில் இருந்த புனித நீர் கொண்டும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது .
நிகழ்வில் ,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top