நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட்ட 30 டூவீலர் ரோந்து வாகனங்களை சேலம் சரக போலீஸ் டிஜிபி உமா துவக்கி வைத்தார்.
இது குறித்து, காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 30 டூ வீலர் ரோந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதில், ஜி.பி.எஸ். கருவி, பிளிங்கர்ஸ் லைட், பப்ளிக் அட்ரசிங் சிஸ்டம் மற்றும் சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும், இப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு, எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான எப்.ஆர்.எஸ். செயலி, வாகனங்களை கண்காணிப்பதற்கான வேகன் சமன்வே செயலி மற்றும் அவசர அழைப்புகளை தொடர்பு கொள்வதற்கான காவல் உதவி செயலி ஆகியவை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இப்பணியில் ஈடுபடும் காவல்துறையினர், சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் காவல் துறைக்கு வரும் அவசர அழைப்புகளுக்கு, உடனடியாக சம்பவ இடம் சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், காவல் நிலைய எல்லைப்பகுதியில், 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட முடியும்.
முதல் கட்டமாக, 30 டூவீலர் ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மேலும், 30 வாகனங்கள் வழங்கப்படும். மேலும், தமிழக முதல்வர் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை, மாவட்ட எல்லைக்குள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்காக, இலவச பேருந்து பாஸ், டி.ஐ.ஜி., மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் ஏ.எஸ்.பி., ஆகோஷ்ஜோஷி, கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், போலீசார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.