திருவண்ணாமலை மாநகராட்சி அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மாடவீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மாடவீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தேரடி வீதி, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் 1.7 கிலோமீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 12 கோடியே 17 இலட்சத்து 94 ஆயிரத்து 738 மதிப்பீட்டில் தரை தளமானது 13073 சதுர அடி பரப்பளவில் கூட்ட அரங்கம், ஒப்பனை அறை (ஆண்கள் மற்றும் பெண்கள்) அலுவலக அறை, மின் அறை, மின் தூக்கி வசதி, பொது கழிப்பறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.
இடைபட்ட தளமானது 2808 சதுர அடி பரப்பளவில் விஐபி அறை, அலுவலக அறை, மின் அறை, மின் தூக்கி வசதிகளுடன், தலா 10975 சதுர அடி பரப்பளவில் முதல் மற்றும் இரண்டாம் தளமானது கூடம், மின் அறை, மின்தூக்கி வசதி. கணினி அறை, வைப்பறை மற்றும் பொது கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கினை ஆய்வு செய்து மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மற்றும் ஒவ்வொரு வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மக்கள் மனுக்களை எளிதில் வழங்கும் வகையில் அலுவலக கூட்டரங்கினை அமைத்திடவும், பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து , திருவண்ணாமலை மாநகராட்சி காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள முதல்வர் மருந்தகத்தினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவாசிய மருந்துகள் இருப்புக் குறித்தும் தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை அறிந்து அதற்கு ஏற்ப மருந்துகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து , கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் விற்பனை அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழு விற்பனை பொருட்களையும் விற்பனை செய்பவர்களிடமும் அய்வு மேற்கொண்டு விற்பனையை அதிகப்படுத்துவதற்கான தகவல்களை கேட்டு அறிந்து மேற்கொள்ள, அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.