Close
மார்ச் 9, 2025 6:39 மணி

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசால் பிரதமரின் இண்டர்ஷிப் பயிற்சி (பிஎம்ஐஎஸ்) என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு, சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு ஆண்டு இண்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற வயது 21 முதல் 24க்குள் இருக்க வேண்டும். ஒரு முறை மட்டும் மானிய உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். 12 மாதங்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயிற்சி மேற்கொள்ள விரும்புவர்கள் ஏற்கனவே நேஷனல் அப்ரண்டீஸ்ஷிப் திட்டத்தின் (என்ஏபிஎஸ்) மூலம் தொழிற்பயிற்சி பெற்றிருத்தல் கூடாது. மேலும், முழுநேர பணி அல்லது முழுநேர கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டிருத்தல் கூடாது.

இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கு நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 11ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்துகொண்டு சேர்க்கை பெற்று பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 82207 77776 என்ற தொலைபேசி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இத்திட்டம் குறித்து முழு விபரம் அறியவும், நேரடியாக பதிவு செய்யவும் https://www.pminternship.mca.gov.in என்ற வெப்சைட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top