பாதரை கிராமத்தில் தனியாரிடம் உள்ள கோயில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, சின்னார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமம், பாதரையிலும், எலந்தக்குட்டை கிராமம் காட்டுப்பாளையத்திலும், பாதரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. பொன்காளியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோயிலில் 18 பட்டி கிராம மக்கள் தரிசனம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த கேயில் பூசாரிகளுக்கு இந்த கோயில் நிலங்களில் பயிர் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாதரையை சேர்ந்த தனியார் ஒருவர் கோயில் நிலங்களை முறைகேடான முறையில் தனது பெயருக்கு கிரையம் செய்துள்ளார். தற்போது அந்த இடத்தில் சோலார் பவர் பிளாண்டுகள் அமைத்து வருகிறார்.
மேலும் அவர் நீர்வழி பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, சோலார் பிளாண்டுகள் அமைப்பதை தடை செய்து, தனியாரிடம் இருந்து சுமார் 13.5 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டெடுத்து மீண்டும் கோயில் நிலங்களுடன் சேர்க்க வேண்டும், நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.