அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை எவ்வித தொய்வின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், ஆரணி எம்.பி. தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் கிரி, அம்பேத்குமாா், சரவணன், ஜோதி, மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் ந ல்லாட்சியில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் சிறப்பு மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் எல்லாம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றுவது ஊரக வளர்ச்சி துறையினரின் முக்கிய பணியாகும்.
மேலும் நமது திருவண்ணாமலை மாவட்டம் 18 ஊராட்சி ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளை கொண்ட மிகப்பெரிய மாவட்டமாகும். மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேற்கொள்ளுவது அரசின் கடமையாகும்.
குறிப்பாக குடிநீர் திட்டப் பணிகள், கிராம சாலைகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், தெரு மின் விளக்குகள், சுகாதாரப்பணிகள், பெரியார் சமத்துவபுரம் வீடுகள் கட்டும் பணிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3114 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கட்டப்பட்டு வருவது குறித்தும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுகாதார மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை பணிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தனி அலுவலர்கள் கண்காணித்து பணியாற்றிட வேண்டும்.
அனைத்து துறைகளின் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். ஊராட்சித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, வளர்ச்சி திட்டப் பணிகளை எவ்வித தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடா்ந்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பாக திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம் வட்டாட்சியா்களுக்கான 3 புதிய வாகனங்களை அவா் கொடியசைத்து தொடங்கி வைத்து சாவிகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் காா்க், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, உதவிச் செயற்பொறியாளா் (சாலைகள் மற்றும் பாலங்கள்) சக்திவேல், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) செந்தில்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.