திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் 55 வயதுக்கு உள்பட்ட அடிப்படை கல்வியறிவு பெற்ற முன்னாள் படைவீரா்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு ஏதுமற்ற முன்னாள் படைவீரா்கள், ராணுவப் பணியின்போது இறந்த படைவீரா்களின் மறுமணமாகாத கைம்பெண்கள், முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்த திருமணமாகாத மகள்கள், முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் பயன்பெறலாம்.
தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். கடன் பெற தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.