Close
மார்ச் 15, 2025 5:38 மணி

பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

ரயில் நிலையத்தில் முண்டியடித்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் 13.03.2024 காலை 11:40 மணிக்கு தொடங்கி 14ம் தேதி பிற்பகல் 12:54  மணிக்கு பௌர்ணமி நிறைவு பெற்றது.

நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

2வது நாளாக

பௌர்ணமி நேற்று பிற்பகல் 12:54 வரை இருந்ததால், இரண்டாவது நாளாக நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது.  பக்தர்கள் கூட்டம் மாட வீதி வரை அதிகரித்ததால், தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தைமாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அதிகாலை முதலே குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது..

அப்போது ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் நிலவியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.

திருவண்ணாமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதினால் ரயில் பேருந்து ஆகியவற்றில் கூட்டணி நெரிசல் ஏற்படுகின்றது. அதனால் கூடுதல் பேருந்து மற்றும் கூடுதல் சிறப்பு ரயில் பௌர்ணமி தோறும் இயக்க வேண்டும் எனவும் பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top