Close
ஏப்ரல் 2, 2025 1:00 காலை

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்

முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது. மாணவர்களை பள்ளி கல்வியிலிருந்து இடைநிறுத்தி வேலைக்கு செல்ல ஊக்கமளிப்பது தவறாகும் என மனுநீதி நாள் திட்டம் முகாமில் ஆட்சியர் அறிவுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் மனுநீதி நாள் திட்டம் முகாம் நடைபெற்றது.

மனுநீதி நாள் முகாமுக்கு ஆரணி வட்டாட்சியா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன், தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் சரவணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது போன்ற மனுநீதி முகாம்களை நடத்துவதற்கான நோக்கம் அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட நல திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக கிராம மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக தான். முகாமில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அதனால் கிராம மக்கள் அனைவரும் முகாமை பயன்படுத்தி பயன் பெற வேண்டும்.

பள்ளி கல்வித் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற காரணத்தால், தேசிய கல்வி சராசரி சதவீதத்தை விட தமிழகத்தில் கல்வி விகிதமானது அதிகளவில் உள்ளது.

குறைந்த வயதில் பள்ளிக்கு செல்கின்ற மாணவர்களை இடை நிறுத்தி வேலைக்கு அனுப்புவது தவறாகும். குழந்தைதொழிலாளர்களை பணியமர்த்துவது மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிப்பது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

குழந்தைகளை பணிக்கு அமர்த்தி கிடைக்கின்ற சொற்ப வருவாயை முக்கியமாக கருதினால்  அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஆகவே குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது. மாணவர்களை பள்ளி கல்வியிலிருந்து இடை நிறுத்தி வேலைக்கு செல்ல ஊக்கமளிப்பது தவறாகும்.

மாணவர்களின் நிரந்தர இலட்சியத்தை அடைவதற்கு தடையாக இருக்க கூடாது. எனவே கல்வி தான் நமது ஆயுதம், கல்விதான் ஒரு மனிதனின் எதிர்கால வாழ்க்கையை திர்மானிக்கின்ற மிகப்பெரிய வழிமுறையாகும். ஆகவே எக்காரணத்தைகொண்டும் பள்ளி மாணவர்களின் கல்வியை இடை நிறுத்தி விடக்கூடாது ,

நமது மாவட்டத்தில் இடைநிற்றல் இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். ஆகவே அதற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கூறினார்.

இதைத் தொடா்ந்து விழாவில் வருவாய்த் துறை (பொதுப்பிரிவு) சாா்பில் ரூ.10 லட்சத்தில் வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளும், வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம் சாா்பில் இயற்கை மரண உதவி நிதி 2 பேருக்கு ரூ.55ஆயிரம், வட்ட வழங்கல் துறை சாா்பில் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறை சாா்பில் 259 மகளிா் குழுக்களுக்கு ரூ. 56 லட்சத்து 16 ஆயிரத்தில் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், விவாத மேடை, பேச்சுப் போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற செய்யாறு அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 33 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top