உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில், முடி காணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட பல இடங்களில் தெலுங்கு மொழியில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தங்கும் விடுதிகள், உணவகங்கள் என திரும்பிய பக்கமெல்லாமல், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் தகவல்கள் பலகைகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்திற்குள் நுழைவது போல் திருவண்ணாமலை மாநகராட்சியில் மெல்ல மெல்ல தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி வார்த்தைகள் நிரம்பி வந்தது. வட இந்தியர்கள், வெளிநாட்டவர்களின் வருகை கணிசமாக இருந்தாலும், தெலுங்கு மொழி பேசக்கூடிய பக்தர்கள் தான் திருப்பதிக்கு அடுத்து திருவண்ணாமலைக்கு அதிகம் வருகின்றனர்.
இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயிலிலும் முடி காணிக்கை செலுத்துமிடம் தொடங்கி, பல இடங்களில் தெலுங்கு மொழியில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே தெலுங்கு மொழியில் பதாகை வைத்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
அது மட்டுமல்லாமல் வியாபாரத் திட்டத்துடனும் அண்டை மாநிலத்தவர்கள் திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப் பாதையிலும் குழுமியிருக்கின்றனர். தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் எனத் திரும்பிய பக்கமெல்லாமல், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என மாற்று மொழிகளின் தகவல் பலகைகளே கண்களுக்கு புலப்படுகின்றன. ஆனால், அத்தி பூத்தாற்போல தமிழ் பெயர்ப் பலகைகளைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும்.
மேலும், பெயர்ப் பலகையில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரினை பெரிய அளவிலான தமிழ் எழுத்துகளில் குறிப்பிட வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தமிழ் எழுத்துகளை விட சிறிய அளவிலான எழுத்துகளில் இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். மே 15-க்குள் 100 சதவிகிதம் தமிழ் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மே 15 வரை கால அவகாசமும் அளிக்கப்படுகிறது. அதன் பிறகும் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.