மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று ஆர்.பி.உதயக்குமார் கூறினார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, சென்னம்பட்டி மற்றும் ஜம்பலப்புரம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில், பெருங்காமநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,
தமிழகத்தில் எந்த மணிமண்டபத்திற்கும் ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை, பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு ஐந்தரை ஏக்கர் நிலம், ஒன்றரை கோடி நிதியை ஒதுக்கி மணிமண்டபம் அமைத்தது அதிமுக அரசு.
எளிய தலைவர், இந்த மண்ணின் மைந்தர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து தியாகம் செய்த மூக்கையாத்தேவரின் பிறந்த தினவிழா வருகிறது, அவருக்கு உசிலம்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது திருஉருவ சிலை அமைக்க அரசாணை வழங்க கூடிய பாக்கியம் அன்று வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எனக்கு கிடைத்தது.
அதே போல, பெருங்காமநல்லூரில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க அரசாணை வழங்கும் பாக்கியமும் கிடைத்தது. இன்று பெருங்காமநல்லூர் என்று கூகுளில் தேடினால் தியாகத்தின் பிறப்பிடம், வீரத்தின் பிறப்பிடம் என்று சொல்கிற வகையில் இடம் பிடித்துவிட்டோம்.
அதன் அடிப்படையில், தான் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன், எங்கள் ஆட்சி காலத்தில் நாங்கள் பி.கே.மூக்கையாத்தேவருக்கும், பெருங்காமநல்லூர் தியாகிகளுக்காகவும் இதை செய்திருக்கிறோம் நீங்கள் இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் கல்வி தந்தை மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் உத்தரவை பெற்று அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மூக்கையாத்தேவரின் பிறந்த தினவிழாவில் திமுக அரசு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தது, அதை நாங்கள் வரவேற்கிறோம்.,
ஆனால் , அதற்கு கோரிக்கை வைத்தது அதிமுக என்பதை மறுக்க முடியாது, அறிவிப்பு வந்த பின் யார் வேண்டுமானாலும் பேசலாம். சட்டமன்றத்தில் பதிவு இருக்கிறது கோரிக்கை வைத்தது எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் வழிகாட்டுதலோடு, எதிர்கட்சி துணைத் தலைவராக இருக்கும் எனக்கு அந்த பாக்கியம் இந்த மண்ணில் இருக்கும் மனிதர்கள் வழங்கியது தான் என பேசினார்.