ஆங்கிலம் படித்தவன் மேல்நாடுகளில் டாலர்களின் பணம் குவிக்கிறான். இந்தி படித்த வட மாநில தொழிலாளர்களும் கொத்தனார் வேலை தான் செய்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமென உத்திரமேரூர் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார் .
உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மானாம்பதி கூட்டு சாலை திடலில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், எம்பி செல்வம் , தரணி வேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் பேசிய தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழகத்தில் முன்மொழிக் கொள்கையை புகுத்த பாஜக முயல்கிறது. கடந்த காலங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையில் கல்வி கற்ற பலர் தற்போது மேலை நாடுகளில் டாலர் கணக்கில் பணம் சம்பாதித்து குவித்து வருகின்றனர்.
ஆனால் வட மாநிலங்களில் உள்ள நபர்கள் இந்தியை கற்று தற்போது தமிழகத்தில் வந்து கொத்தனார் மற்றும் கார்பென்டர் வேலைகளையே செய்து வருவதால் தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், உத்திரமேரூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.