திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1079 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1079 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நல திட்ட உதவிகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கட்டணமில்லா தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டியை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வழங்கினார்.
தொடர்ந்து படி அக்ரகாரம் ஊராட்சியை சேர்ந்த ஏழுமலை என்ற கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அக்குள் கட்டை வேண்டி அளித்த மனு மிது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ1,850/- மதிப்பிலான அக்குள் கட்டையை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதிபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி, செய்யார்
மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அறிவுறுத்தலின்படி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 93 மனுக்களும்,
செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 105 மனுக்களும், பெறப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மண்டல துணை வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.