Close
ஏப்ரல் 24, 2025 2:49 மணி

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலி: அண்ணாமலையார் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். அதில், 29 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயிலின் பிரதான நுழைவு வாயில்களான ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சனம் கோபுரம் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்த பிறகே பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், பக்தர்கள் கொண்டு செல்லும் பை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. கோயில் உட்பிரகாரம் முழுவதும் வெடி பொருட்கள் ஏதேனும் உள்ளதா என துப்பறியும் நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை நகருக்குள் வரும் வாகனங்கள் முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்து நகருக்குள் அனுமதிக்கின்றனர்.

அதேபோல், திருவண்ணாமலை நகரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் , கிரிவலப் பாதை, தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் அனைத்து சாலைகளிலும் இரவு நேர ரோந்து பணி தொடர்ந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top