Close
ஏப்ரல் 26, 2025 8:55 மணி

பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ரமணபகவான்

பகவான் ரமண மகரிஷிகளின் 75 ஆவது ஆராதனை ஸ்ரீ ரமணாச்ரமத்தில் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சேஷாத்திரி சுவாமிகள்.

சேஷாத்திரி சுவாமிகள் குறித்து மற்றொரு மகானிடம் கேட்டாராம் பக்தர் ஒருவர். ”சுவாமி, சேஷாத்திரி சுவாமியைப் பைத்தியம் என்கிறார்களே..?” இதைக் கேட்ட அந்த மகான் சிரித்துவிட்டார்.

”ஆமாம், திருவண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, அண்ணாமலையார் என்கிற பைத்தியம்; இன்னொன்று சேஷாத்திரி சுவாமிகள் என்கிற பைத்தியம்; மூன்றாவது இந்தப் பைத்தியம்!” என்றாராம்.  அந்த மகான் வேறு யாருமல்ல. தான் யார் என்பதைத் தேடி, இளம் வயது முதலே அலைந்து திரிந்து தவம் புரிந்து தன்னைப் பரமாத்ம ஸ்வரூபமாகக் கண்டுகொண்ட ஸ்ரீ ரமண மகரிஷியே ஆவார்.

1879-ஆம் ஆண்டு திருச்சுழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான். வேங்கடராமனாக பிறந்த ரமணர் சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். வேங்கடராமனுக்கு 12 வயது ஆனபோது அவரது தந்தை மரணம் அடைந்தார்.

அப்போதே அவரது மனதில், ‘மரணம் என்பது என்ன’, ‘மரணத்திற்குப் பிறகு அந்த உயிர் என்ன ஆகிறது எங்கே போகிறது’ என்ற கேள்விகள் அவருடைய மனதில் எழுந்ததாக கூறப்படுகிறது.  அதன் பிறகு தந்தையை இழந்ததால், சித்தப்பாவின் பொறுப்பில் விடப்பட்ட வேங்கடராமன், 1891-ஆம் ஆண்டு மதுரை சென்றார்.

அங்கு அவருக்கு கல்வியில் பெரிய அளவில் கவனம் செல்லவில்லை. அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அதிக நேரம் அந்தக் கோவிலிலேயே செலவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இனிமேல் தனது இருப்பிடம் திருவண்ணாமலை என்று முடிவு செய்து, விசேஷ வகுப்புக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, 3 ரூபாயை எடுத்துக்கொண்டு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி திருவண்ணாமலைக்குப் புறப்பட்டு வந்தார்.

வழியில், கையில் இருந்த பணம் செலவானதால், மாம்பழப்பட்டு என்ற ஊரில் இருந்து திருக்கோவிலூர் வழியாக நடந்தே 1896-ம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி திருவண்ணாமலை வந்தடைந்தார். கட்டி இருந்த வேட்டியில் கோவணம் என்ற அளவுக்கு துணியைக் கிழித்து மற்றவற்றை குளத்தில் வீசினார்.

கோவணத்தை மட்டுமே அணிந்துகொண்டு, யாரிடமும் தீட்சை பெறாமல், தன்னைத்தானே துறவியாக அறிவித்துக்கொண்டார். திருவண்ணாமலை கோவிலுக்குள் சென்ற வேங்கடராமன், முதலில் சில நாட்கள் அங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் வரவே, யாருமே அதிக அளவில் வராத பாதாள லிங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அமர்ந்து தியானம் செய்தார்.

ரமணரை உலகிற்கு காட்டிய ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

ஒரு நாள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பாதாள லிங்கத்தை காண்பித்து இதோ ஒரு அற்புத ஞானி உள்ளே தியானத்தில் உள்ளார். அவரை சென்று வணங்குங்கள் என்று கூறினார். உள்ளே சென்று பொதுமக்கள் பார்த்தபோது பாதாள லிங்கத்தில் தியான நிலையில் ரமண மகரிஷி இருந்துள்ளார். அவரை சுற்றி இருந்த மண் புற்றுக்களை அகற்றி அவரை வெளியே அழைத்து வந்தனர்.

பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார். அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது.

திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம்பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி, 1950-ம் ஆண்டு இயற்கையோடு கலந்தார். கடந்த நூற்றாண்டில் கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி.

ஆராதனை விழா 

இந்நிலையில் திருவண்ணாமலை – செங்கம் சாலை மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண பகவானின் ரமணாசிரமத்தில், ஆராதனை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மங்கள இசையுடன் தொடங்கிய ஆராதனை விழாவில் ரமண பகவான் சிலைக்கு ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து, வேத மந்திரங்கள் முழங்க ரமண பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இவ்விழாவில் இசை கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top