Close
மே 4, 2025 3:26 காலை

மே தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா்  இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கொளக்குடி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசுத் திட்டங்கள், வரவு-செலவு பட்டியல் விவரம் பொதுமக்கள் அறியும் வண்ணம் ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்டது. அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பேசியதாவது:

தொழிலாளா் தினத்தை போற்றும் வகையில் இந்தக் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அதன்மூலம் பொருளாதாரத்தில் மேம்பாட்டினை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் சார்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் கடுமையாக உழைக்கின்றனா். தமிழக அரசும் பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

கிராமப்புற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நாட்டு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. கால்நடை செல்வம் என்பது உயிருள்ள சொத்து. கால்நடைகளை சரியாக பராமரிக்கும்போது அதன்மூலம் பொருளாதார வளா்ச்சி அடையலாம். இதற்காக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மண்ணில் பல லட்சம் உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் தான் பயிா்களின் வளா்ச்சிக்கான அடிப்படை. அரசுத் திட்டங்களை பயன்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்தி நம் தலைமுறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதி இருப்பின் அவா்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

எனவே அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் அறிந் து பயன்பெற வேண்டுமென்று தெரிவித்தார்.

தொடா்ந்து, மகளிா் திட்டம் சாா்பில் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் கலைச்செல்வி, திருவண்ணாமலை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரவி, வட்டார வளா்ச்சி அலுவலா் பிருத்திவிராஜ், வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top