Close
ஜூன் 15, 2025 3:29 காலை

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி : சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்..!

விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் சாகுபடி முறைகள் குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கினார்.

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி நடந்தது. அந்த பயிற்சியில் நெல்லுக்கு பின் உளுந்து, கடலை, எள் சாகுபடி குறித்த தொழில்நுட்பபயிற்சி வழங்கப்பட்டது.

மதுக்கூர் வட்டாரம் இளங்காடு கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தலைமை வகித்து அட்மா திட்ட செயல்பாடுகள், மாநில அரசு திட்டங்கள் மண்நீர்பரிசோதனை முக்கியத்துவம் , உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோயின் கட்டுப்பாடு மற்றும் பயிர் இன்சூரன்ஸ் பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வேளாண்மை அலுவலர் சரவணன் விவசாயிகளுக்கான பி எம் கிசான் உதவி தொகை பெறுதல் , குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் காரிப்பருவத்தில் செயல்படுத்தப்பட உள்ள மாற்று பயிறாக உளுந்து சாகுபடி மற்றும் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான மாநில வேளாண் வளர்ச்சி திட்ட மானியங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.

வேளாண் உதவி அலுவலர் ராமு ‌ஜிங்க் சல்பேட் நுண்ணுரத்தின் முக்கியத்துவம் பற்றி
கூறினார். இளங்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் செல்வநாயகம் குறுவை நெல் பயிருக்கு வழங்கப்படும் சொசைட்டி கடன் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண் வணிக துறையில் இருந்து கண்காணிப்பாளர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறுவது பற்றி எடுத்துக் கூறினார்.

தோட்டக்கலை அலுவலர் ஜானகிராமன் வீட்டுக் காய்கறி தோட்டம், மா கொய்யா சாகுபடி மற்றும் புதிய தென்னந்தோப்புகளுக்கான மானியத் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அட்மா திட்ட அலுவலர் சுகிர்தா உயிர் உரங்களின் முக்கியத்துவம் மற்றும் மண் நலத்தின் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

விவசாயிகளுக்கான கருத்துக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் திரவ உயிர் உரம் வழங்கப்பட்டு அதன் பயன்பாடு பற்றி விளக்கி கூறப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top