Close
நவம்பர் 24, 2024 10:23 மணி

மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழு

தமிழினி துணைவன்

மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுகு உதவும் தமிழினிதுணைவன் வாட்ஸ் அப்குழு கலந்துரையாடல்

நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி தொடர்பான சந்தேகங்கள் விளக்கங்களுக்கு வழிகாட்டும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்று 4.2.2022 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றிருக்கும்  மாணவர் களுக்கு வழிகாட்டும் வகையில், தமிழினி துணைவன் என்ற புதிய வாட்ஸ்அப் குழுவை தொடங்கி உள்ளார்கள்.

தமிழினி புலனம்என்ற வாட்ஸ்அப் குழு வெகுநாட்களாக இயங்கி வருகிறது. இக்குழுவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்களாக உள்ளவர்களே பெரும்பாலும் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களின் மன இறுக்கம் போக்கும் வகையில் கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது இந்தக் குழு.

நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாடு முழுதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, மருத்துவக் கல்வியை எளிதாக படித்திட, தமிழினி- மருத்துவக் கல்வி வழிகாட்டுதல் குழுவை, தமிழினி துணைவன் என்ற பெயரில் உருவாக்கி உள்ளார்கள்.இதன் மூலம் அனுபவமிக்க மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் இணையவழியில் ஆலோசனைகளை வழங்கி தமிழ் வழிக் கல்வியில் படித்து மருத்துவம் படிக்கத் தேர்வாகி இருப்பவர்களுக்கு உதவிட திட்டமிட்டு ள்ளனர்.

தமிழகம் முழுதும் மருத்துவம் படிக்கத் தேர்வாகி இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, அவர்களது செல்போன் எண்ணுக்கு தமிழினி துணைவன் குறித்த விளக்கமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.மேலும், வாரம்தோறும் முதலாமாண்டு உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகிய பாடங்கள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அனுபவமிக்க பேராசிரியர்கள் மூலம் இணையவழி வகுப்புகள் மூலம் எளிதில் அவர்கள் புரிந்துகொண்டு படிப்பதற்கு ஏதுவாக தமிழினி துணைவன் தொடர்ந்து உதவிட உள்ளது.இதற்கு உரிய ஒருங்கிணைப்புப் பணியை திருச்சி, சமூக மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவர் வீ.சி.சுபாஷ் காந்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலிய ஆசிரியர் உமா திருவேங்கடம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழினி துணைவன் குழு  ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். வீ.சி. சுபாஷ் காந்தி கூறியதாவது: அரசுப் பள்ளியில் இருந்து தமிழ்வழி கல்வி மூலம் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மிகக் கடினமான சவால்களை மனதளவில் எதிர்கொள்ள நேரிடும். அவற்றை சமாளிப்பதற்கான வழிமுறை களை மாணவ மாணவிகளுக்கு வழங்குவதோடு முதலாமாண்டு மருத்துவ பாடங்களை மிகவும் எளிமையாக புரிந்து படிப்பதற்கு ஏதுவாக தமிழினி துணைவன் உருவாக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சியும் தொடர் பயிற்சியும் இருந்தால் தமிழ் வழி கல்வி படித்த மாணவ மாணவிகளுக்கு மொழி மருத்துவம் படிப்பதற்கு ஒரு தடையாக இருக்காது. வெற்றிகரமாக மருத்துவப் படிப்பை முடித்துவிடவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு மாணவ மாணவிகள் எந்தவித சிறு தாழ்வுமனப்பான்மையும் ஏற்படாமல் படித்திட வேண்டும்.

மருத்துவ சொற்களை படிப்பதற்கு முதல் அடி எடுத்து வைக்கும்போது மிகவும் கடினமாக இருக்கும். அவற்றை எளிதாக மாணவர்களுக்கு கற்பிக்க தமிழினி துணைவன் அனுபவமிக்க மருத்துவ பேராசிரியர்களை ஒரு குழுவாக கொண்டுள்ளது.

நோயாளிகளை குணப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மருத்துவ பாடங்களை இணைத்து படிக்கும் முறை, ஆங்கி லத்தில் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி மருத்துவ பாடங்களை எளிமையாக எழுதும் முறை,மருத்துவக் கல்லூரி நூலகத்தை பயன்படுத்தும் விதம், தினமும் பாடங்களை படிக்கும் முறை, குழுவாக படித்தல் ,மருத்துவம் சார்ந்த வண்ணப் படங்களை வரைதல் ஆகியவை குறித்து மாணவ மாணவிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை நேசிக்கவும் மனிதர்களை வாசிக்கவும் மருத்துவ மாணவ மாணவிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற சூழலிலிருந்து பெரும்பாலான மாணவ மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கான உடை பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவைகள் மூத்த மருத்துவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட் டுள்ளது. கருணை மற்றும் கடின உழைப்பு இருந் தால் நிச்சயமாக வெற்றிகரமான மருத்துவராக வெளிவர முடியும் என்று மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. முதலாமாண்டு மருத்து வ பாடங்களைகளை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தமிழினி துணைவன் மூலம் அனுபவம் மிக்க மருத்துவ பேராசிரியர்கள் வாயிலாக மாலை 6 முதல் 8 மணி வரை மருத்து வக் கல்வியை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்று மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தமிழினி துணைவன் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மருத்துவ கல்வியை எளிதில் புரிந்துகொண்டு படிப்பதற்கு மருத்துவ பேராசிரி யர்களின் ஆலோசனைகள் உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர் என்றார்.

இணையம் வழியாக நடைபெற்ற முதல் அமர்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் திருவேங்கடம், திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மலைத்துரை, திருச்சி உடலியங்கியல் துறை பேராசிரியர் (ஓய்வு) மருத்துவர் .சரயு, உடற்கூறு இயல் பேராசிரியர் (ஓய்வு) மருத்துவர் மகேஸ்வரி, கரூர் அரசு மருத்துவக் கல்வி உதவி பேராசிரியர் தமயந்தி, பல் மருத்துவர் பத்மலோசனி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் குலாம் முகைதீன் மற்றும் சென்னை கதிரியக்க நிபுணர் மருத்துவர் தென்றல் ஆகியோர் பங்கேற்று மருத்துவ மாணவ-மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழிகாட்டுதல், ஆலோசனைகள் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top