திமுக தேர்தல் நேரத்தில் கூறிய எதையும் இதுவரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்..
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் மூன்றாவது நாளாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.
புதுகை நகராட்சியின் 18 -ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாரதியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து டாக்டர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது:
கஜா புயலாக இருந்தாலும் சரி கொரோனா காலகட்டமாக இருந்தாலும் சரி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த கட்சியின் சின்னம் இரட்டை இலை. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. பொங்கல் பரிசுத்தொகையை திமுக அரசு வழங்கவில்லை. இதேபோன்று மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள்.
அதுவும் இதுவரை வழங்கவில்லை.திமுக கூறிய எதையும் இதுவரை அவர்கள் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். எனவே கொடுக்கும் கட்சி அதிமுக எனவே பொது மக்கள், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்றார் அவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 187 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.