Close
நவம்பர் 22, 2024 11:16 காலை

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – நடைபயணம்: ஈரோடு ஏஐடியுசி தீர்மானம்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற ஏஐடியுசி தொழில்சங்க ஆலோசனைக்கூட்டம்

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் – நடைபயணம் மேற்கொண்டு ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு  அனுப்பி வைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் மாவட்ட அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சி.சுந்தரம், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தெற்கு மாவட்டப் பொருளாளர் எம்.குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.பாபு, கே.எம்.ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலச் சங்க முடிவுகள் பற்றி விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – நடைபயணம்
ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு சமர்பிப்பது.

கட்டுமானத் தொழிலாளர்களின் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்-13 புதன்கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர்  நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று
மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு சமர்பிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்:  14-12-2021 தேதிய நலவாரிய கூட்ட முடிவுகளை ஏற்று   தமிழக அரசின் தொழிலாளர் துறை உடனே அரசாணை வெளியிட்டு நலவாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு அமைப்பாக மாற்ற வேண்டும்.

28-02-2011 தேதிய அரசாணை எண் 36 -ஐ முன்தேதியிட்டு செயல்படுத்தி, 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

 வாரியப் பதிவுக்கு VAO பரிந்துரை கோருவதை கைவிட வேண்டும். ஆன் லைன் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் சமர்பித்தலில் உள்ள குறைபாடுகளைப் போக்க வேண்டும்

சொந்த வீடில்லாத அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்திட திட்டம் கொண்டு வரவேண்டும்.

 தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டங்களின் கீழ் அமைக்கப்படும் வீடுகளில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 கட்டுமானத் திட்ட மதிப்பீட்டில் 1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நலநிதியை 5% ஆக உயர்த்த வேண்டும்.  விபத்து மரண இழப்பீட்டை ரூ.10 லட்சமாகவும் இயற்கை மரண உதவித்தொகையை ரூ.5 லட்சமாகவும் உயர்த்த வேண்டும்.

 ஓய்வூதியத்தை மாதம் ரூ.6,000/- ஆக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

 மகப்பேறு காலத்தில் 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பு அல்லது 60 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை வழங்க வேண்டும்.  கட்டுமானத் தொழிலாளர்களுக்கு PF , ESI திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top