புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2022 மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு 7-07-2022 வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்கள், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் கவிதைகளையும், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கந்தர்வன் சிறுகதைகளையும் சிறுவர் கதை களஞ்சியம் போன்ற தங்களுக்குப் பிடித்தமான நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.
பள்ளியின் முதல்வரும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி கூறியதாவது: முதல் முறையாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டையில் தொடங்கிய ஆண்டிலிருந்து நடத்தப்படும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தார்கள். பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை, அறிவை சான்றோர்களின் அனுபவங்களை அறிந்து தெளிவு பெற முடியும்.
இளமையில் கல் என்ற வாக்கிற்கிணங்க வாசிக்கும் பழக்கத்தை அறியஇ நூல்களை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வு பெரிதும் உதவுகிறது என்றார் அவர்.
இந்த நிகழ்வில் பள்ளியின் மேலாண்மை இயக்குனர், பள்ளியின் ஆலோசகர்கள், துணை முதல்வர், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தார்கள்.