Close
ஏப்ரல் 5, 2025 11:49 மணி

சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்த வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை

மாற்று உரங்கள் வேளாண்துறை விவசாயிகளுக்கு யோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் அதிக மகசூல் பெறத் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. தனியார் மற்றும் கூட்டுறவுச் சில்லறை உர விற்பனை நிலையங்களில் 3578 மெட்ரிக் டன் யூரியா, 1203 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 972 மெட்ரிக் டன் பொட்டாஷ், 4012 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 340 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன் இருப்பு விவரங்களை விவசாயிகள் உழவன் செயலியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சம்பா பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மண்வள அட்டைப் பரிந்துரைப்படி உரமிடுவதாலும், தற்பொழுது பயிரிடப்பட்டுள்ள பசுந்தாள் உரப் பயிர்களை அவை 50 சத பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதாலும் சாகுபடிக்குத் தேவையான தழைச்சத்து தரக்கூடிய யூரியா போன்ற உரங்களைக் குறைத்துச் செலவினைக் குறைக்கலாம்.

மேலும் யூரியா உரத்தினை அளவோடு பயன்படுத்தினால் நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் குறையும். எனவே, ஒருங்கினைந்த உர நிர்வாகத்தினை கடைபிடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அசோலா: சம்பா பருவத்தில் நட்ட 3 முதல் 5 நாட்களில் ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் அசோலா எனப்படும் நுண்ணுயிரகளை பரவலாகத் தூவி நெற்பயிரின் ஊடே வளரவிட வேண்டும். அது வளர்ந்த நிலையில், களையெடுக் கும் தருணத்தில் உருளும் களைக்கருவி கொண்டு அல்லது காலால் மண்ணுக்குள் மிதித்துவிட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தேவையான அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை தலா 4 பொட்டலங்கள் அல்லது தலா 200 மிலி திரவ உயிர்உரத்தினை 10 கிலோ மட்கிய தொழு உரத்துடன் கலந்து, நடவுக்கு முன் சீராகத் தூவ வேண்டும்.

மேலும், பொதுப் பரிந்துரையாக மத்தியகால மற்றும் நீண்டகாலப் நெற்பயிர்களுக்குத் ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 60, 20, 20 கிலோ தேவைப்படும். இச்சத்துக்கள் குறைவின்றிக் கிடைப்பதற்கு யூரியா 53 கிலோ, காப்பர் சல்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடலாம். அல்லது 20:20:0:13 என்ற காம்ப்ளக்ஸ் உரம் 120 கிலோ அளவிலும் பொட்டாஷ் உரத்தினை 21 கிலோ அளவிலும் அடியுரமாக இடலாம்.

இதனால் நெற்பயிர் நன்கு வாளிப்பாக வளர்வதால் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து மேலுரமாக யூரியா இடும்பொழுது ஒரு ஏக்கருக்கு 26 கிலோ என்ற அளவில் மேலுரமாக 3 முறை இட வேண்டும்.

காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்துவ தனால் உரம் வீணாவது தடுக்கப்படுவதோடு பயிருக்குத் தேவையான உரங்கள் மண்ணில் தேவையான அளவு கிடைப்பதனால் பூச்சி, நோய்த் தாக்குதலும் வெகுவாகக் குறைகின்றது. பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தழை, மணி, சாம்பல் சத்துக்களை உரப் பரிந்துரையின்படி இடுவதால் உரச் செலவு குறைவதோடு, பூச்சி, நோய்த் தாக்குதலும் குறைந்து அதிக மகசூல் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாவதால், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினைக் கடைப்பிடித்துப் பயனடைந்திடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top