Close
மே 17, 2024 5:10 காலை

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்  முதல் உரை…

இங்கிலாந்து

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது ஒரு துரதிருஷ்டம்.
வெறுமனே உள் கட்சி பூசல் மட்டுமல்ல, பிரிட்டனில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்ந்து பதவி விலகினார்கள் இதற்கு முந்தைய பிரதம மந்திரிகள்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றம், கோவிட் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, இவையிரண்டின் தாக்கம் இன்னும் தணியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில் முன்னாள் நிதி அமைச்சரும், பழமைவாத கட்சியின் பிரபலமான ஆளுமையான இந்திய வம்சாவளியில் வந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்று நிகழ்த்திய உரை இது தான்..

நான் இப்போதுதான் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்றிருந்தேன், மன்னரின் அழைப்பை ஏற்று அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். உங்கள் புதிய பிரதமராக நான் ஏன் இங்கு நிற்கிறேன் என்பதை விளக்குவது தான் சரியானது. தற்போது நமது நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கோவிட் பாதிப்பு இன்னும் நீடிக்கிறது.

உக்ரைனில் புடினின் போர், உலகம் முழுவதும் எரிசக்தி சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்துள் ளது. எனது முன்னோடி லிஸ் டிரஸ்ஸுக்கு நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். அவர் இந்த நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த விரும்பியதில் தவறில்லை.

அது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்க அவர் காட்டிய முனைப்பை நான் பாராட்டினேன். ஆனால் அதில் சில தவறுகள் நடந்தன. அவை தீய எண்ணங்களுடன் உருவாக்கப்படவில்லை. இருப்பினும்  அவை தவறுகளே.
அவற்றைச் சரி செய்வதற்காகவே எனது கட்சியின் தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை இந்த புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை செயல்களில் முக்கியத்துவம் கொண்ட மையப் புள்ளியாக வைப்பேன்.இது சில கடினமான முடிவுகளை வரவழைக்ககூடும்.

ஆனால், கோவிட் பேரிடர் காலத்தில் என்னைப் பார்த்திருப் பீர்கள், பிரிட்டன் மக்களை, நாட்டின் தொழில்களை பாதுகாக்க, சில பொருளாதார திட்டங்களுடன் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.

எல்லாவற்றிலும் எப்போதும் சில வரம்புகள் உள்ளன, முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் இன்றைய சூழலில். இருப்பினும் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களிலும் அதே பரிவை, அதே முனைப்பை நான் காட்டுவேன் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் ..,

நான் வழி நடத்தும் இந்த அரசாங்கம், இன்று நாம் தீர்க்க வேண்டிய கடன்களை நம் அடுத்த தலைமுறையின் தலையில் கட்டி விடாமல், நம் பிள்ளைகளையும், பேரக்குழந்தைக ளையும் கடனாளியாக்கி விடாமல் பார்த்துக்கொள்வோம்.

நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதற்காக நாள் தோறும் உழைப்பேன். தொழில் சார்ந்த வணிக பரிவர்த்தனை இவற்றின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடுடன், நாணயத்துடன் செயல்படும் அரசாங்கமாக இருக்கும் இந்த அரசு.

நம்பிக்கை என்பது எப்போதும் பெறக்கூடிய ஒன்று. நான் அந்த நம்பிக்கையை உங்களிடமிருந்து நிச்சயமாக சம்பாதிப்பேன். பிரதம மந்திரியாக போரிஸ் ஜான்சனின் சாதனைகளுக்காக நான் எப்போதும் அவருக்கு நன்றியுள்ள வனாக இருப்பேன்.

மேலும் அவரது அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மை யை நான் பொக்கிஷமாக கருதுகிறேன். 2019 -ல் எனது கட்சி பெற்ற வெற்றி, மக்கள் கொடுத்த ஆதரவு என்பது எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல, அது நம் அனைவருக் கும் சொந்தமானது. அவை நம்மை ஒன்றிணைக்கும் கொள்கை விளக்க அறிவிப்பு என்பதை கட்சியில் உள்ள அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு வலுவான சுகாதார மருத்துவ சேவை, சிறந்த பள்ளிகள், பாதுகாப்பான சாலைகள், நம் தேச எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு இவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்துவேன்,
நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நமது ஆயுதப் படைகளுக்கு ஆதரவு தருதல்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்திற்கு பிறகான வணிக முதலீடு மற்றும் வேலைகளை உருவாக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் அதை சமன் செய்தல் என உறுதியான நிலைப்பாடுகளில் கவனம் செலுத்துவேன். இந்த தருணம் எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்கிறேன்.

கோவிட்-ஐ எதிர்த்துப் போராட கோடிக்கணக்கான பவுண்டுகள் செலவானது. ஒரு பயங்கரமான போரின் நடுவில் ஏற்பட்ட அனைத்து இடப் பெயர்வுக்குப் பிறகு, அதன் முடிவுகளை வெற்றிகரமாகக் காண வேண்டும். விஷயங்கள் எவ்வளவு கடினமானவை என்பதை நான் முழுமையாக உணர்வேன்.
மேலும், நடந்த அனைத்து சம்பவங்களுக்குப் பிறகும் நம்பிக்கையை மீட்டெடுக்க எனக்கு வேலை இருக்கிறது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். இவைகளை கண்டு நான் திகைத்து நிற்கவில்லை, நான் ஏற்றுக் கொண்ட உயர் பதவியை நான் அறிவேன், அதன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.

சேவை செய்யும் வாய்ப்பு வரும்போது, அந்த இக்கட்டான தருணம் குறித்து கேள்வி கேட்காமல், நாட்டுக்காக கடமையாற்றும் விருப்பம் சார்ந்த வினாக்களை எழுப்ப வேண்டும். எனவே நம் நாட்டை எதிர்காலத்தில் வழி நடத்த தயாராகி உங்கள் முன் நிற்கிறேன்.

உங்கள் தேவைகளை எங்கள் அரசின் முன் வைத்து, எனது கட்சியின் சிறந்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அணுகி உருவாக்க வேண்டும்.இதை நாம் ஒன்றாக இணைந்து அந்த இலக்கை அடைய வேண்டும். பலர் செய்த தியாகங்களுக்குத் தகுதியான எதிர்காலத்தை உருவாக்கி, நாளையும், அதன் பிறகான ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் நிரப்புவோம்.நன்றி.

இந்த நெருக்கடியான சூழலில் வாழ்க்கை நடத்திக் கொண்டி ருக்கும் இங்கிலாந்துவாசிகளான எங்களுக்கு நம்பிக்கையூட் டும் வகையில் இருக்கிறது புதிய பிரதமரின் பேச்சு.

உலகையே.., குறிப்பாக இந்தியாவை பல நூறு ஆண்டுகள் ஆண்ட பிரிட்டனை, இன்றைய அரசியல் சூழலில் ஒரு இந்திய வம்சா வழி வந்தவர் எவ்வளவு காலம் ஆளுவார் என்கிற ஏக்கம் நிறைந்த கேள்விகள் எழும்பினாலும், அவரது அறிவு திறமை, அனுபவம் இவற்றை கொண்டு, வளைந்த பொருளாதாரத்தை நிமிர்த்தி காட்டுவார் என நம்புவோமாக..,

… இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top