Close
மே 10, 2024 2:06 மணி

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிரடி மாற்றம்

நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி திடீரென மாற்றம் செய்யப்பட்டு, மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொமதேக வேட்பாளர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நாமக்கல் தொகுதியில் போட்டியிட, கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தியை வேட்பாளராக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஈரோட்டை சேர்ந்த சூரியமூர்த்தி, நாமக்கல் என்ஜிஜிஓ காலனியில், வாடகை வீடு பார்த்து வசிப்பிடத்தை மாற்றினார். மேலும், கொமதேக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் 21ம் தேதி நடைபெற்ற, இண்டியா கூட்டணிக் கட்சியின் 6 சட்டசபை தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும், கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனுடன் அவர் பல்வேறு முக்கிய கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கொங்கு சமுதாய மாநாட்டில் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை தரக்குறைவாக பேசியதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவியது. அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்றும், இது சம்மந்தமாக ஈரோடு கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்ஐடு அது சூரியமூர்த்திக்கு சாதகமாக தீர்ப்பாகியுள்ளது என்றும் சூரியமூர்த்தி ஒரு வீடியோவை பதிவு செய்தார். இந்த நிலையில், சிலர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக பேசிய, நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றும் செய்யப்பட்டு மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ., வெளியிட்டுள்ளார். மாதேஸ்வரன் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளராக செயல்பட்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அவர் விவசாயம் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top