Close
மே 13, 2024 12:09 காலை

விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகே தேனி கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

தேனி

தேனி பிடிஆர் கால்வாயை திறந்த அமைச்சர் ஐ. பெரியசாமி

விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகே தேனி கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 18ம் கால்வாய், பி.டி.ஆர்.கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் உத்தம பாளையத்தில் போராட்டம், ஊர்வலம் நடத்தினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை அதனால் தான் தண்ணீர் திறக்க தாமதம் ஆனது. நாங்கள் என்ன அரபிக் கடலில் ஒளித்து வைத்துக் கொண்டா தண்ணீர் திறக்க மறுக்கிறோம் என வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் கொடுத்த பேட்டி, காரணமாக விவசாயிகள் மேலும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் திடீரென வராது வந்த மாமணியாய் வெளுத்துகட்டியது மழை. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழையை விட அதிகமான மழைப்பொழிவு ஒரே நாளில் பெய்தது. வைகை அணை நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடியும். பெரியாறு அணை நீர் மட்டம் ஒரே நாளில் மூன்று அடியும் உயர்ந்தது. இன்னும் அணைகளுக்கு நீர் வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில், திடீரென அமைச்சர் ஐ.பெரியசாமி  நேற்று மாலை 5.30 மணிக்கு 18ம் கால்வாயிலும், பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறந்தார். தற்போது பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியை எட்டி உள்ள நிலையில், இன்னும் சிறிது மழை கிடைத்தாலும், அணை நீர் மட்டம் 142 அடியை தொட்டு விடும். அப்படி நீர் மட்டம் உயர்ந்து விட்டால், நீர்வளம் மிகவும் செழித்து விடும்.

இருப்போது இருக்கும் நீரே கூட போதுமானது. இருப்பினும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. தாமதம் ஆனாலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழையால் கண்மாய்கள், வாய்க்கால்களில் ஈரப்பதம் அதிகம் உள்ளதால் திறக்கப்பட்ட நீர் எளிதில் கடைமடைக்கு வந்து சேர்ந்து விடும். எனவே விவசாய பணிகளை விவசாயிகள் நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top