திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு (சம்பா)
பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடப்பு ஆண்டில், திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 91835
ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 15 ம் தேதி பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் 18938 ஏக்கர் பரப்பளவிற்கு மட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
மேலும் நடவு பணிகள் தாமதமாக ஆரம்பித்த காரணத்தினாலும் மழை பொழிவு தாமதமாக உள்ள காரணத்தினாலும் இன்னும் 15 நாட்களுக்கு பயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் சம்பா நெற் பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.566ஃ-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நடப்பு ரபி மற்றும் சிறப்பு பருவத்திற்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் நவம்பர் 30ம் தேதிக்கு
முன்னதாகவே காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையி்ல் கூறப்பட்டு உள்ளது.