பதினோரம் வகுப்புத் தேர்வில் தோல்வியுற்று, “எங்கேயாச்சும் போய்த்தொலை” என்று அம்மா திட்டியதால் “அம்மா அப்படி யெல்லாம் சொல்லாதேம்மா. நான் எப்படியாவது இந்தப் படிப்பை வச்சே நல்லபடியா ஒரு வேலையிலே சேர்ந்து, ஒரு நாளைக்குப் பெரியாள வரேனா இல்லையா பாரு” என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி சொன்னபடியே பெரிய ஆளாக வந்த ஒருவரின் கதைதான்” வெற்றிப் படிகள். அவரின் தோல்வி தமிழ்ப் பதிப்புலகிற்கு கிடைத்த வெற்றி.
வானதி பதிப்பகம் முன்னணி தமிழ்ப்பதிப்பகங்களில் முதன்மையானது. அதைத் தொடங்கியவர் செட்டிநாட்டின் முக்கிய ஊர்களில் ஒன்றான தேவக்கோட்டையிலிருந்து அம்மாவிடம் கோபித்துக் கொண்டு சென்னை வந்து வானதி பதிப்பகத்தை தொடங்கி, வளர்த்து, புகழ் பெற்று இன்று “வானதி திருநாவுக்கரசு” என்று அழைக்கப்படும் செட்டிப் பிள்ளை திருநாவுக்கரசு(12.08.1927-19.11.2016) 1955 ஆண்டு வானதி பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
கல்கியின் பேரில் கொண்ட பற்றின் காரணமாக ‘பொன்னியின் செல்வனில்’ வரும் நெஞ்சை அள்ளும் பாத்திரங்களில் ஒன்றான வானதியின் பெயரை தனது பதிப்பகத்திற்கு சூட்டியுள்ளார்.
தமிழ்கூறும் நல்லுலகம் பேசும் ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர, ஏனையோர் நூல்களையெல்லாம் பதிப்பித்த பெருமை வானதிக்கு உண்டு. தேசிய உடமை ஆக்குவதற்கு முன்பு கல்கியின் நூல்களை பெரும்பாலும் வானதி மட்டுமே வெளியிட்டது.
காஞ்சிப் பெரியவர் (தெய்வத்தின் குரல்), வாரியார், ராஜாஜி, கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், சிவசங்கரி, கண்ணதாசன், எம்.எஸ்.உதயமூர்த்தி என்று எண்ணற்ற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருக்கிறது வானதி.
ராஜாஜியின் மகாபாரதம், இராமாயணம், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள் விற்பனையில் உச்சம் தொட்டது.
இந்நூலில் ” எனது வாழ்க்கை அனுபங்கள்” என்ற அத்தியா யத்தில் தன்னுடைய 70 ஆண்டுகள் வாழ்க்கையில் (இந்த நூல் திருநாவுக்கரசின் 70 -ஆவது ஆண்டில் வெளியிடப்பட்டது) பல்வேறு நிலைகளில் ஊக்கப்படுத்தி, வாழ்த்தி, வழிகாட்டிய பெருமக்கள், நண்பர்களை (மொத்தமுள்ள 394 பக்கத்தில் 317 பக்கங்களில்) நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்.
காஞ்சிப் பெரியவர், வாரியார், ராஜாஜி, கல்கி, சாண்டில்யன், உதயமூர்த்தி என்று 73 ஆளுமைகளைகளைப் பற்றிய நினை வலைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு 50 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற பெரியோர்களின் சிறப்பை இதன்வழி அறிய முடிகிறது.
எண்ணெற்ற தன்னம்பிக்கை நூல்களை வெளியிட்ட வானதி திருநாவுக்கரசின் “வெற்றிப் படிகளும்” ஒரு தன்னம்பிக்கை நூல்தான்.”எதைக் கண்டாலும் ஒதுங்கி நிற்பது. நம்மால் இது முடியுமா என்று சந்தேகப்படுவது. இந்தக் குணக்கேடுகள்தாம் இன்றைய இளைய தலைமுறையினரை சீர்குலைக்கின்றன என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்.
வாழ்வில் வெற்றி என்பது வெறும் பணம் காசு பற்றியதாக மட்டுமில்லாமல், பாரத தேசத்திற்குரிய பண்பாட்டு, ஆன்மீக உணர்வு, சான்றோர்களை மதித்தல், அவர்கள் அறிவுரைக ளைப் பின்பற்றுதல், செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்பி ஓயாது உழைத்தல், உயிர்களிடத்து அன்புகாட்டுதல், ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல், வாய்மையே வெல்லும் என்பவை நம்மோடு துணை நின்று வருவனவாய் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார் இந்நூலில். (பக்.15). வானதி வெளியீடு.
…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…
thank you very much