பர்மா, மலேயா, முதலிய அயல்நாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் அந்நாடுகளின் பெருமைகளைப் பல மடங்காகப் போற்றிப் புகழ்வார்கள். “ஆகா ரங்கூன் வீதிகள் எவ்வளவு அழகாக இருக்கும்!சிங்கப்பூரில் கண்மூடி கண் திறப்பதற்குள் எத்தனை ஆயிரம் மோட்டார்கள் வீதிச் சந்திப்பிலே !” என்றெல்லாம் கூறுவார்கள். இத்தமிழர்களில் பெரும்பாலோருக்குத் தமிழ்நாட்டின் பேரழகும், அதன் பெருமைகளும் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமிராது. பக்.7
இங்கிலாந்து தேசத்து ரயில்களில் மூன்றாம் வகுப்பு கூட மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். அந்த வண்டிகளில் அந்த நாட்டின் அழகிய காட்சிகளடங்கிய புகைப்படங்களை வைத்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டு ரயில்நிலையங்களில் தப்பித்தவறிப் பார்த்தால் “திருடர்கள் ஜாக்கிரதை”, “துப்பு இங்கே” என்பன போன்ற அறிவிப்புப் பலகைகளைத்தான் பார்ப்போம். பக்.13.
அமெரிக்கர்கள் அறிவிப்பலகை விஷயத்தில் சில நல்ல முறைகளைக் கையாண்டார்கள். உதாரணமாக..இது பள்ளிக்கூடம், தயவு செய்து மோட்டாரை மெதுவாக ஓட்டுங்கள். ஏனென்றால் நமது குழந்தைகளிடம் நமக்கு அன்பு உண்டு..தயவு செய்து கடன் கேட்காதீர்கள். ஏனெனில் நாங்கள் மிகவும் ஏழைகள் (சிற்றுண்டி சாலையில்)பக்.16, 17.இது போல பல சுவாரஸ்யங்கள் ஏ.கே.செட்டியாரின் “இந்தியப் பயணங்கள்” நூலில் உள்ளது.
அ.கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே.செட்டியார் (1911 – 1983) பயண இலக்கியத்தின் முன்னோடி. மகாத்மா காந்தியைப் பற்றி முதன் முதலில் ஆவணப்படம் எடுத்தவர். “உலகம் சுற்றும் தமிழர்” என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தான் பார்க்கும் தேசம், அதன் கலாச்சாரம்,பண்பாடு, வரலாறு என்று அனைத்தையும் சிறப்பாக எழுதுவதில் வல்லவர். வாசிப்பவர்கள் வாசித்தபின் தாங்கள் அந்த இடத்திற்கு போய் வந்த உணர்வைப் பெறுவார்கள்
“இந்தியப் பயணங்கள்” என்ற இந்த நூலில் 18 கட்டுரைகள் உள்ளது. ராஜ்கோட், பூரி-ஜகந்நாதம், பீஜப்பூர், கோவா, செஞ்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி, தரங்கம்பாடி, குமரிமுனை -ஆகிய நகரங்களைப் பற்றிய கட்டுரைகளும் இதில் உள்ளது.இதன் முதல் பதிப்பு 1954ல் வெளிவந்துள்ளது.
இது சந்தியாவின் 2014ஆம் ஆண்டு பதிப்பு.சந்தியா பதிப்பகம்,044 – 24896979
ரூ.75.
#சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை#