Close
மே 20, 2024 9:38 மணி

புத்தகம் அறிவோம்…சோ எழுதிய வந்தேமாதரம்..

தமிழ்நாடு

சோ எழுதிய வந்தேமாதரம்

‘சோ’  ராமசாமி  துக்ளக் பத்திரிக்கையில் 1970 -களில் எழுதிய தொடர்கதை வந்தே மாதரம். தான் காதலித்தவள் தன்னை காதலிக்கவில்லை என்பதையறிந்தபின், தன் காதலியின் காதலனை சேர்த்து வைக்க தன் உயிரைத் தியாகம் செய்யும் ஒருவனின் கதை இதன் மூலம்.

சோ சொல்வது போல் இது உலகப் புகழ்பெற்ற, உலகில் அதிகமாக விற்பனையான சார்லஸ் டிக்கன்ஸின் Tale of Two Cities என்ற நாவலில் வரும் சிட்னி கார்ட்டனை கடன் வாங்கிதான் இந்த தொடர்கதை எழுதப்பட்டது.

டிக்கன்ஸின் நாவலும் ஒருதலைக் காதலை அடிப்படையாகக் கொண்டதுதான். இதுவும் அப்படியே. அது பாரிசிலும், லண்டனிலும் நடக்கும். இது சென்னையில் நடக்கும். அது பிரெஞ்சுப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டது. இது இந்திய சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

அங்கே ஒருவரை காதலிக்கும் இருவருக்கும் உருவ ஒற்றுமை இருக்கும். இங்கே இல்லை. அங்கே கில்லட்டின்-மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் கருவி. இங்கே கயிறு. இரண்டு கதைகளிலும் வரும் நாயகர்கள் அதிமேதாவிகள்.

அதே போல் காதல் இரண்டிலும் உன்னதமாக சித்தரிக்கப்பட்டி ருக்கும். காதலிக்கும் இளைஞர்கள் தான் விரும்பும் பெண் தன்னை விரும்பவில்லையென்றால் ‘ஆசிட்’ வீசுவதற்கு முன் இந்த கதைகளை வாசிக்கவும்…! வந்தேமாதரம் தொடர்கதை தொடர்பான ஒரு சுவாரஸ்யமான செய்தி.

துக்ளக் அப்போது மாதமிருமுறையாக வந்தது. வந்தேமாதரம் 37 அத்தியாயங்களாக 18 மாதங்களுக்கு மேல் வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், வெற்றி பெற்றவன் மேதாவி. தோல் அடைந்தவன் முட்டாள்.என்றுமே இதுதான் மனித இனத்தின் தீர்ப்பு.

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் என்று முதலில் சமஸ்கிருத ஸ்லோகமும் அடுத்து தமிழாக்கமும் இருக்கும். நான் அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். லேசா இது அர்த்த சாஸ்திரமில்லையே என்று சந்தேகம். ஆனால் உறுதிசெய்ய முயற்சிக்க வில்லை.

தொடர் முடிந்து முடிவுரையாக அடுத்த இதழில் எழுதியபோது சோ சொல்வார், “வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ‘அர்த்தசாஸ்திரம’ என்று 37 அத்தியாயத்திலும் நான் எழுதியது என் சொந்தக்க கருத்தே” என்று.

மேலும் சொல்வார்” இது கெளடில்யரின் அர்த்தசாஸ்திரமா? என்று கேட்டு ஒரு கடிதம் கூட எனக்கு வரவில்லை என்று. என்னை மன்னியுங்கள். நான் எழுதியது என்று தெரிந்திருந் தால் ஒருவரும் வாசித்திருக்க மாட்டார்கள்.

கெளடில்யர் என்றதும் எல்லோரும் வாசித்தார்கள். புத்தகம் எங்கே கிடைக்கிறது முகவரி தாருங்கள் என்று கேட்டார்கள். இதை எடுத்து சில பத்திரிக்கைகள் கூட பிரசுரித்தார்கள்’ என்றும் வேடிக்கையாகக் குறிப்பிடுவார். நாம் மட்டும் என்ன அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எழுதினால் உறுதி செய்ய முயற்சிக்கிறோமா? வந்தேமாதத்தை ‘அல்லயன்ஸ் ‘ நூலாக வெளியிட்டுள்ளது.

>>> பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை<<<

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top