மெக்காலேவின் கல்விக் கொள்கை சமூக தளத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறதென்பதையும் நாம் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். மெக்காலே ஒரு கிருஸ்தவராக இருந்த போதும் பொது விவகாரங்களிலும், கல்வியிலும் மதம் நுழைந்து விடக்கூடாது என்பதில் மிக உறுதியாகவே இருந்திருக்கிறார்.
அவரின் குடும்பத்தினர் பலர் சமய குருமார்களாகவும், திருச்சபை பணியாளர்களாகவும் இருந்த போதும் மதத்திற்கு அப்பாற்பட்டே இருந்தார். மெக்காலேவால்தான் இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது என்ற கருத்தும் சமூகவியல் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.
ஒரு வேளை மெக்காலேவால் முன்னிறுத்தப்பட்ட ஆங்கிலம் நடைமுறைபடுத்தப்படாமல் இருந்திருந்தால் இந்தியா ஒரு மதவழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல் மாறி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மெக்காலேவின் ஆங்கில க்கல்வி இந்தியாவை அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறதென கொர்னாட் எல்ஸ்ட் போன்ற மெக்காலேவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போல் சமூக தளத்தில் சாதி இறுக்கத்தைத் தளர்த்தியது, மூட நம்பிக்கைகளை விரட்டியது அறிவியல் சிந்தனைகளை, சமத்துவ எண்ணத்தை உருவாக்கியது என பல மாற்றங்கள் சுட்டிக்காட்டப் படுகின்றன.(பக். 113).
“இந்திய ஆங்கிலக் கல்வி முறையின் தந்தை” என்றழைக் கப்படும் மெக்காலே, 1835 ல் அவர் அறிமுகப்படுத்திய கல்வி முறையால் இன்றும் பேசுபொருளாக இருக்கிறார். இந்தியர்களுக்கு ஒரு புதியதோர் உலகத்தைக் காட்டினார் என்று ஒரு சாரரும், இந்திய கலாசாரச் சீரழிவிற்கு வழிவகுத்தார் என்று மற்றொரு சாரரும் குறைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இரா.சுப்பிரமணியின் “மெக்காலே – பழைமை வாதக் கல்வியின் பகைவன் ” எனும் இந்த நூல் மெக்காலே கல்வியின் உண்மை நிலையைக் கண்டறிய முயற்சிப்பதோடு, மேலும் இதைப் பற்றிய முழுமையான விவாதம் தொடர்ந்து நடத்த வேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறது.
விவாதங்கள் எப்படி இருந்தாலும், இந்தியாவிலிருந்து மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கிலத்தை அவ்வளவு எளிதாக விரட்டி விட முடியாது. தாகூரும், சர் சி.வி.ராமனும் நோபல் பரிசு பெற உதவியது ஆங்கிலமே.கல்வியாளர்கள் வாசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய நூல் “மெக்காலே”
வெளியீடு-சாளரம்,4 ஏ பூபதி நகர்,கீழ்க் கட்டளை,சென்னை. 600117.