தமிழ் மொழி பேசும் சோழ மண்டல முஸ்லிம்கள் பெரும்பான்மையான இந்து மக்களோடு காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மதரீதியான சமுதாய அமைப்புகளில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.
தமிழ் முஸ்லிம்களின் உடை, பொதுவான பழக்கவழக்கங்கள் அனைத்திலும் இந்து சமுதாயத்தின் தாக்கம் நிலவுவதைக் காணலாம். இவற்றில் இஸ்லாமிய – இந்துக் கலாசாரக்கூறுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பல்வேறு காலகட்டமாக இஸ்லாத்திற்கு வந்தவர்களிடம் அவர்தம் மூதாதையர்களின், பழக்க வழக்கங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.
இதனைத் தமிழ்ச் சமூகத்தின் தனிச்சிறப்பு என்று சொல்லலாம். பாரம்பரியமான இப்பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளோடு முரன்படாத வகையில் நாட்டுப்புறவியல் வழக்காக பின்பற்றப்படுகின்றன. இதனாலேயே தோபுன் (Thoburn) போன்ற மேல் நாட்டறிஞர்கள் முஸ்லிம்கள் பலர், பெயரளவிலேயே முஸ்லிம்களாக உள்ளனர் என்ற, மேலோட்டமான கருத்தைத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.
(பக். 71).
புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், ஜமால் முகமது கல்லூரி இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குனராகவும் பணியாற்றி வரும், முனைவர் ஜெ.ராஜா முகமது அவர்களின் இந்த நூல் தமிழ் முஸ்லீம்களின் வாழ்வைப் பற்றிய புதிய வெளிச்சத்தை நமக்குக் காட்டுகிறது.
இரண்டு செய்திகளை இந்நூலின் வழி அறியலாம். ஒன்று, இஸ்லாத்தின் தோற்றம், வரலாறு மற்றும் அதன் கோட்பாடுகள்.இரண்டாவது தமிழ் பேசும் முஸ்லிம்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முழுமையான செய்திகள், பண்டிகைகள், பண்பாட்டுக் கூறுகள்.
ஆசிரியர் மிகச்சிறந்த வரலாற்றாசியர் என்பதால், நல்ல தரவுகளோடு அழகாக, எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் இந்த நூலை யாத்திருக்கிறார்.அனைவரும், குறிப்பாக சமூகவியல் ஆய்வாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
வெளியீடு:இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி 620020.0431 – 233 1135.ரூ.200.
#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#