நண்பர்களே, சீடர்களே! இந்த நிமிடத்தில் கைவசமுள்ள வாழ்க்கை முழுமையாக அனுபவியுங்கள்.இந்த நிமிடத்துடன் சம்பந்தப்பட்டவற்றில் முழுமையாக ஈடுபடுங்கள்.
இந்த நிமிடம் உங்கள் முன்னால் இருப்பவரை (வந்திருப்பவரை) முழு ஈடுபாட்டுடன் கவனித்து உபசரியுங்கள்.இந்த நிமிடம் எதிர் படுகின்ற சவால்களைப் புறக்கணிக்காமல் விரைந்து தீர்வு காணுங்கள்.
இந்த நிமிடம் கையில் தேங்கியுள்ள வேலையை விரைவாக முடித்து விடுங்கள். ஒரே சமயம் பல வேலைகள் வேண்டாம். ஒரு சமயம் ஒரு வேலை போதும் (uni- tasking)தள்ளிப்போடுதல், சாக்குச் சொல்லுதல் இரண்டையும் தவிர்த்துவிடுங்கள்.
கடமை அல்லது பொறுப்பிலிருந்து நழுவும் மனப்பான்மை வேண்டாம்.நீங்கள் முழுமையாக வாழ்க்கூடிய நேரம் என்பது இந்த நிமிடம் தான். அதில் லயிப்புடன் கலந்து கொள்ளுங்கள்(பக். 137-138).
டாக்டர் ஸ்ரீதரன், சொல்வது போல், தினந்தோறும் ஏராளமான எண்ணிக்கையில் உற்பத்தியாகின்ற பொருள்கள் எவை என்று பட்டியல் போட்டால் அதில் நிச்சயம் புத்தகங்கள் இடம்பெறும். எந்த வகையான நூல்கள் வெளியாகின்றன என்று ஆராய்ந்தோமானால், வாழ்வில் முன்னேறுவது பற்றிய நூல்களின் எண்ணிக்கையே அதிகமானது என்று தெரியவரும்.
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, பி.சி.கணேசன், மெர்வின், அப்துற் ரஹீம் போன்றவர்கள் டஜன் கணக்கில் சுயமுன்னேற்ற நூல்களை படைத்து, தமிழ் உரைநடையின் பிரிவுகளில் “சுயமுன்னேற்ற இலக்கியம் ” என்னும் புதிய பிரிவும் வேறுன்றி செழித்து வளர உதவியுள்ளனர். டாக்டர் ஸ்ரீதரனும் பல சுயமுன்னேற்ற நூல்களை எழுதியுள்ளார்.
சுயமுன்னேற்ற நூல்கள் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றியதல்ல. ஏசு கிருஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. பகவத்கீதை, விதுர நீதி போன்றவையும் அவ்வகையில் சேரும்.
ஸ்ரீதரனின், “கிரேக்க ஞானம் – வாழ்வழிக்கும் வார்த்தைகள் (ஆளுமை மேம்பாட்டு நூல்) ” கிரேக்க ஞானி எபிக்டெடஸ் உபதேசித்தது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்நூல் ஆங்கில வடிவம் பெற்று, அது ஸ்ரீதரனால் தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. எபிக்டெடஸ் கி.பி. 559 ல் பிறந்தவர். இவரை எபிக்டீடஸ் என்றும் அழைப்பதும் உண்டு.
இன்றைய தன்னம்பிக்கை இலக்கியத்தில் உள்ள அத்தனை செய்திகளும் இவரின் போதனையில் உள்ளது.
ஸ்ரீதரன் இந்த நூலை, 1.சுயமுன்னேற்ற நூல்கள், காலத்தின் கட்டாயம், 2.அனுபவம் பேசுகிறது, 3.எபிக்டெடஸின் தத்துவப் பார்வை,4.வாழ்வழிக்கும் வாரத்தைகள்
என்று நான்கு தலைப்புகளில் மொழியாக்கம் செய்துள்ளார்.
வாழ்வழிக்கும் வார்த்தைகள் என்ற நான்காவது தலைப்பில், எபிக்டெடபிஸின் உபதேசங்களை நூலாசிரியர் 83 தலைப்புகளில் நமக்கு பிரித்துத் தந்திருக்கிறார்.
சில தலைப்புகள்:
மண்ணிலே வேலி போடலாம்,
வானத்திலே வேலி போடலாமா?
ஊர் வம்பு வேண்டாம்,
நடப்பனவற்றை அப்படியே ஏற்க,
எது எப்படியோ அது அப்படியே,
கிடைத்ததை ஏற்பது விவேகம்,
எண்ணங்களின் வலிமை,
விமர்சனத்திற்கு வருந்த வேண்டாம்,
லட்சியத்தில் உறுதி,
சிகரம் தொட்டவரைப் பின்பற்றுக ,
பண்புடைமை பணத்தை விட உயர்வு,
பட்டறிவு பயனுள்ள அறிவு,
தெளிவாகத் திட்டமிடல்,
சமூக உறவுகள்,
உறவில் பொறுமை,
பேச்சுக் கலை,
சுயபுகழ்ச்சி வேண்டாம்,
தற்பெருமை வேண்டாம்,
உடலுக்கு மரியாதை
புற அழகு முக்கியமன்று,
புத்தங்கள் வழிகாட்டி மட்டுமே,
நன்றி உணர்வு.
கடைசி தலைப்பு தான் பதிவின் முதலில் உள்ளது.எபிக்டெடஸ், அக்காலச் சிந்தனையை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன் இக்காலத்திற்கும், தன் போதனை மூலம் வழி வழிகாட்டுகிறார்.
எபிக்டெடஸின் கருத்துகள், பிரான்சு நாட்டு தத்துவ ஞானி ரூஸோ , கம்யூனிசத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைந்த தாமஸ் ஜெபர்சன் போன்ற அறிஞர்களையெல்லாம் கவர்ந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். வெளியீடு- கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை- 17.044 – 24342810.
#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #