நீராரும் கடலுடுத்த நிலமடைந்தைக் கெழிலொழுகும் …தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை -சுரப் படுத்தியவர்எம்.எஸ்.விசுவநாதன்.ராகம் – மோகனம், தாளம் – திஸ்ரம்(பக்.9).
21.11.1970 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி (Memo No.3584/70-4) தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் யாவற்றிலும் சுந்தரம் பிள்ளையின் “நிராரும் கடலுடுத்த ” பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக இசைக்கப்பட ஆரம்பித்தது. ( அப்போது தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி)(பக்.137).
1876 ஆம் ஆண்டில், தான் பயின்ற திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் ஆசிரியர் பணி ஆற்றும் நல்வாய்ப்பு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கு கிட்டியது..
“தாம் மறுநாள் கற்பிக்கவிருக்கும் பாடங்களை முதல் நாளிலேயே நன்கு படிப்பார். அதற்குப் பல நூல்களைப் படித்து அந்தப் பாடத்திற்குரிய கருத்துக்களைத் திரட்டுவார். அதை சாதாரண மாணவர்களும் புரிந்து கொள்ளுமாறு நன்முறையில் விரித்துரைப் பார். மாணவர் எத்துணை முறை கேட்டாலும் சலிப்பின்றிச் சினமின்றிக் கூறுவார். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே சந்தித்து படிப்பில் ஊக்குவிப்பார். அவர்தம் ஐயங்களை மகிழ்வோடு ஏற்று நீக்குவார்….” (இன்றைய ஆசிரியர்கள் கவனிக்க)
“பாடம் கற்பிக்க வேண்டுமென்றால், பண்பு நிறைந்த, அறிவு நிறைந்த என் அன்பு மாணவன் மாணவர்களின் பெருமதிப்பிற்குப் பாத்திரமான ஆசிரியர் சுந்தரம் பிள்ளையிடம் பயிற்சி பெற வேண்டும் என அடிக்கடி திரு.ராஸ், தன்மகன் யு.டி. ராஸ் என்பாரிடம் கூறி பெருமைப்படுவாராம். (கல்லூரி தலைவரான இவர் தான் சுந்தரம் பிள்ளைக்கு ஆசிரியப் பணியாற்ற வாய்ப்பு தந்தவர்)(பக். 15).
இந்திப் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரைப் பற்றி ஒன்று சொல்வார்கள்; நாளில் 24 மணி நேரமும் அவருடைய பாடல்கள் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று.அதே போல மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் நாள்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அவரின், பேராசிரியர்’ மனோன்மணியம்’ பெருமாள் பிள்ளை சுந்தரம் பிள்ளை , பிறந்த நாள் ஏப்ரல் 4.( 4.4 .1855 – 26.4.1897).ஆனால், இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வந்திருக்கும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற இந்த நூலில் ஆசிரியர் ந.வேலுசாமி , அவர் பிறந்தது, கொல்லம் (வணிகம் செய்ய பிள்ளையவர்கள் மூதாதையோர் ஆழப்புழைக்கு தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்) ஆண்டு 1030 , பங்குனி மாதம் 28 ஆம் நாள், அதாவது 5.4.1855 என்று.பாரதியை விட மூன்றாண்டுகள் அதிகம் வாழ்ந்தவர். அவரைப் போல் இறவாப்புகழ் பெற்றவர்.
சாகித்திய அகாதமி வழிகாட்டுதல்படி ஆசிரியர் வேலுசாமி இந்த நூலை உருவாக்கியுள்ளார். பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆசிரியப் பணி, பேராசியர் பணி, படைத்த நூல்கள் அவைகளைப் பற்றிய விளக்கங்கள், உவேசா வுடன் கொண்டிருந்த உறவு யாவற்றையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். நூலின் பிற்பகுதியில், வாழ்க்கைக் குறிப்புகள், படைத்த நூல்களின் விபரப் பட்டியல் (13 தமிழ், 7 ஆங்கில நூல்கள்) கூடுதலாக வாசிக்க துணை நூல் பட்டியல் என்று யாவும் பயனுள்ள வகையில் சேர்த்துள்ளார்.
தமிழக அரசு அவருடைய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமைத்த தோடல்லாமல், திருநெல்வேலி பல்கலைக் கழகத்திற்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளித் தமிழ்ப் பாட நூல்களில் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாமல் இருக்கும். அதை எல்லா மாணவர்களும் தவறில்லாமல் பாட, எழுதக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். …. வித்தகன் சுந்தரன் பேர்மெய்யாய் விளங்க வைத்தல்
இத் தமிழ்நாட்டில் வாழும்எம்மனோர் கடமை அன்றோ?”என்று கவிமணி சி. தேசிய விநாயகம் பிள்ளை சொல்வது போல். வெளியீடு- சாகித்திய அகாதமி, புதுடில்லி, விலை -ரூ.50.
#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#