Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வாகனங்கள் வாங்குவதை நிறுத்தா விட்டால் போராட்டம்: அனைத்துப் பணியாளர் சங்கம் எச்சரிக்கை

ஈரோடு

ஈரோடு மண்டலத்துக்குள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் நடைபெற்றது.

தமிழகத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வாகனங்கள் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரும் 12 -ஆம் தேதி சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் ஈரோடு மண்டலத்துக்குள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டச் செயலாளர் மேசப்பன் வரவேற்றார். மாநில கெளரவ பொதுச் செயலாளர் சி.குப்புசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பணியாளர் கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.செல்லமுத்து முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டம் குறித்து மாநிலத்தலைவக் சி.குப்புசாமி, மேசப்பன் ஆகியோர் தமிழ்மணி.நியூஸ் செய்தியாளரிடம் கூறியதாவது:

ஈரோடு
ஈரோட்டில் போராட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4550 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் எம்எஸ்சி-ஏஆஎஃப் திட்டத்தின்கீழ் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேவையற்ற வாகனங்களையும், உபகரணங்களையும் வாங்குமாறு கூட்டுறவுத் துறையின் உயரதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

வேளாண் நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இதுபோன்ற செயல்களால் பல்வேறு கடன் நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏற்கெனவே கடன் தள்ளுபடி போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சங்கங்கள் தள்ளாடும் நிலை உள்ளது.

வங்கி பணிகளை மட்டும் மேற்கொள்ளும் சங்கங்கள் லாரி போன்ற கனரக வாகனங்களை வாங்கி பயன்படுத்துமாறு கூறுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே கனரக வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வரும் நபர்கள் டீசல் விலை உயர்வு, வாகனங்களை இயக்குவதற்கு போதிய ஓட்டுநர்கள் இல்லாத காரணத்தால் அந்த தொழிலையே கைவிடும் நிலை உள்ள நிலையில் வேளாண் கூட்டுறவு சங்கங்களும் தேவையின்றி இதுபோன்ற வாகனங்களை வாங்குவதால் அவற்றை பராமரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

கடந்த நிதியாண்டில் லாரி, பிக்கப் வேன், ஈச்சர், டிராக்டர் போன்ற வாகனங்களை வாங்கிய பல கூட்டுறவு கடன் சங்கங்கள் கடும் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. வாகனங் களை வாங்குவதற்காக பெரும் தொகை செலவிட்டு, இதைப் பராமரிக்கவும் கூடுதல் நிதியை செலவிடுவதால் சங்கப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே வாகனங்களை வாங்கும் முடிவை கைவிடுமாறு ஏற்கெனவே மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு மாநில சங்கத்தின் மூலம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
எங்களது கோரிக்கை நிறைவேறாத காரணத்தால் கடந்த செப்டம்பர் 25 -ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மண்டல இணைப்பதிவாளர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இம்மாதம் 3 -ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1200 -க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

தொடர்ந்து இந்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதால் மண்டல அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் 12 -ஆம் தேதி மண்டல அளவில் சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு கடன் சங்க அனைத்து செயலர்கள், அலுவலக பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் என 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

#செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top