Close
ஜூலை 7, 2024 8:15 காலை

ஆசிரியர் தேர்வு வாரிய செயலரின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

ஈரோடு

ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வரன் முருகனின் (ஈரோட்டில் உள்ள) மாமனார் இல்லத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தந்தை இல்லத்திலும் ரெய்டு

ஆசிரியர் தேர்வு வாரிய செயலரின் தந்தை, மாமனார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வரன்  முருகனின் (ஈரோட்டில் உள்ள) மாமனார் இல்லத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தந்தையாரின் இல்லம் உட்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக இருந்தவர் ராமேஸ்வரன் முருகன். இவர் கடந்த ஆட்சியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள ராமேஸ்வரன் முருகனின் மாமனார் அறிவுடை நம்பி வீட்டிலும், கோபிசெட்டிபாளையம் வெள்ளாங்கோயில் பகுதியில் உள்ள அவரது தந்தையார் வீட்டிலும் இன்று காலை 8 மணி முதல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறிவுடைநம்பிக்கு, ஈரோடு அக்ரஹார வீதியில் நகைக்கடை உள்ள நிலையில் அங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரேகா உள்ளிட்ட 8 -க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம், வெள்ளாங்கோயிலில் உள்ள ராமேஸ்வர முருகனின் வீட்டில் அவரது தந்தை சின்ன பழனிசாமி இருந்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது தொடர்ந்து பகல் பொழுதிலும் நீடித்தது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது இவர் மீது எழுந்த பல்வேறு முறைகேடு புகார்களின் அடிப்படையிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரிலும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நீடிக்கும் நிலையில் சோதனையின் முடிவில் தான் முழு விவரமும் தெரியவரும்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top