ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு இந்துமுன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக புலவர் தமிழரசன், விவசாயி தூரன் மஞ்சுநாத் எழுச்சி உரையாற்றினர். மாநிலச் செயலாளர்கள் சி.பி.சண்முகம், சேவுகன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் , ஈரோடு மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன் , ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் மாநில மாவட்ட , ஒன்றிய , நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருங்கத்தொழுவு பஞ்சாயத்து கத்தக்கொடிக்காடு என்ற கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பசுவபட்டியில் இருந்து வந்த அர்ச்சுனன் (எ) ஜான்பீட்டர் என்பவர் இடம் வாங்கி அரசு அனுமதி பெறாமல் ஜெபக் கூட்டம் நடத்தி வந்தார். அக்கூட்டத்திற்கு வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து மதப்பிரசாரம் செய்து வந்தார்.
இப்பிரச்சாரத்தின் போது இந்து தெய்வங்களை இழிவுபடுத் தியும், இந்துக்களின் பண்பாடு கலாசாரத்தை கொச்சைப் படுத்தி வந்தார். இதை அறிந்த உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் மதப்பிரசாரம் செய்து வந்தார்.
இச்செயலை ஊர்மக்கள் மீண்டும் தட்டிக் கேட்க சென்ற போது ஊர் பொதுமக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியும், பொய் வழக்குகள் போடப்பட்டது. கந்த சஷ்டி அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயிலை காப்பாற்றப்பட வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடும் பக்தியோடும் முருக பக்தர்கள் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் ஊர் மக்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்தவ கல்வாரி மலை ஆக மாற்றுவதாக கூறிய கிறிஸ்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக் கான பொது மக்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
# செய்தி: மு.ப. நாராயணசுவாமி #