திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சனிக்கிழமை ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர்கள் ,ஷியாம், சந்தோஷ், புவனேஷ், விஜய் இவர்கள் நான்கு பேரும் இங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். சனிக்கிழமை விடுமுறை என்பதால் நான்கு பேரும் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்திற்கு வந்து இங்குள்ள கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை சிக்கி நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஜையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. பின்னர் கடலில் மூழ்கி இறந்து போன நிலையில் சந்தோஷின் சடலம் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
மேலும் ஷியாம், புவனேஷ் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் அதே பகுதியில் ஒதுங்கின. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் ஷியாம், புவனேஷ் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.