இணைய வழி மோசடிகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏ எஸ் பி அறிவுறுத்தினார் .
தமிழ்நாடு இணைய வழி குற்றப்பிரிவு ஏடிஜிபி சஞ்சய் குமார், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி ஸ்டாலின், மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோரின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு சார்பில் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமீப கால இணையவழி குற்றங்கள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி தொடர்பான கருத்தரங்கம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையில் , கல்லூரி முதல்வர் ஆனந்தராஜ் அவர்கள் முன்னிலையில் “Recent Trends in Cyber Crime & Its Prevention” என்ற தலைப்பில் இணையவழி குற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அப்போது சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, பேசுகையில் ஆன்லைன் வேலை வாய்ப்புகள், ஆன்லைன் முதலீடுகள், சங்கிலி தொடர் சேமிப்பு, போன்றவை மூலம் சமீப காலமாக இணையவழி குற்றங்கள் அதிகம் நடந்து வருகிறது . அதே போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், பங்கு சந்தையில் சலுகைகள் என்னும் பெயரிலும் குற்றங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது செல்போனுக்கு புதியதாக வரும் வங்கிகள், வேலை வாய்ப்புகள், ஆன்லைன் முதலீடுகள் சம்பந்தப்பட்ட லிங்கினை தவிர்ப்பது நல்லது என குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் பழனி பேசினார்.
மேலும் இது போன்ற மோசடிகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் இணையதளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, இணைய வழி மோசடி நடந்தால் 1930 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக புகாரை பதிவு செய்யுங்கள் எனவும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சைபர் கிரைம் பிரிவு எஸ் ஐ செந்தில்குமார், சிறப்பு எஸ்ஐ மணிமாறன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.