திருச்சியில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ‘(வயது53). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ராமச்சந்திரன் திருச்சி வயலூர் சாலை சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த சத்திய மூர்த்தி என்ற நிதி நிறுவன அதிபரிடம் ரூ.3 லட்சம் பணம் வாங்கி இருந்தார். இதற்கான வட்டி பணத்தை அவர் முறையாக செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக பேசுவதற்காக ஆசிரியர் ராமச்சந்திரன் உறையூர் சாலைரோட்டில் உள்ள சத்திய மூர்த்தியின் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சென்றார். அப்போது சத்திய மூர்த்திக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
சத்திய மூர்த்தி மற்றும் அவரது ஆட்கள் ராகேஷ், பாட்ஷா ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக ராமச்சந்திரன் உறையூர் போலீசில் புகார் செய்தார். உறையூர் போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபர் சத்திய மூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாட்ஷா மற்றும் ராகேஷை தேடி வருகிறார்கள்.