Close
ஜனவரி 7, 2025 6:16 மணி

20 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! மகிழ்ச்சியும் நெகிழ்சியும்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியங் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்‘ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாய் யானைமலை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களின் பள்ளியை சீரமைத்து சாதித்து காட்டியுள்ளனர்.

மதுரை, யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2003 – 2005ம் ஆண்டில் 12 ம் வகுப்பு படித்த, முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் அரசுப் பள்ளி’ என்னும் தலைப்பில் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி (டிச.29) நடைபெற்றது.

ஒத்தக்கடை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவருக்கு கல்வி வாய்ப்பை நல்கி வரும் இந்தப் பள்ளி, அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்பட்டன.

தாங்கள் பயின்ற பள்ளி வளாகம், இவ்வாறு கிடப்பதை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் மாணவர்கள், வாட்ஸப் குழு ஒன்றை ஏற்படுத்தி, அங்கு படித்த ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் தேடிக் கண்டடைந்து, தற்போது 50-க்கும் மேற்பட்டோரின் பேருதவியால் தங்களின் ‘பள்ளி ஆலயத்தை’ தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

இந்த சேவையால் எங்கள் மனதும் எங்கள் பள்ளியும் ‘குடமுழுக்கு’ காணவிருக்கிறது எனப் பூரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் கஸ்தூரி, சுதாமதி, பேபி ராணி, சின்னக் கருப்பன், ராஜ சுலோக்ஷனா மற்றும் மணிமேகலை ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தங்களின் முன்னாள் ஆசிரியர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், காலத்திற்கும் பெயர் சொல்லும் வகையில் காலண்டரில் அச்சடிக்கப்பட்ட ஏழு ஆசிரியர்களின் புகைப்படத்தை ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினார்கள். இதனைக் கண்ட ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், பள்ளிக்கு முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் அரசுப் பள்ளி’ எனும் தலைப்பில் அரையாண்டு விடுமுறை தேர்வு மற்றும் 2025 ம் ஆண்டின் புத்தாண்டினை முன்னிட்டும், அரசுப் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து, பள்ளியில் ஒரு மரக்கன்று நட்டு வைத்தனர். இந்த சந்திப்பையொட்டி 2003, 2005 ம் ஆண்டில் பிரபலமான, கடலை மிட்டாய், பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனை முன்னாள் மாணவ மாணவிகள் பாண்டியன், ராஜ் குமார் மற்றும் உமாசங்கரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதில், பலூனை ஊதி வேகமாக உடைப்பது, அதிகமான ஸ்டார் கோர்ப்பது, கணவன் மனைவி திருமண குறித்த போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 2003-2005 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ மாணவிகள், தலைமை ஆசிரியர் சரவணக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், ஓய்வு பெற்ற உதவியாளர் பாக்கியம் ஆகியோர் பங்கேற்றனர்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த முன்னாள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து பேசி மகிழ்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பிரிய மனமில்லாமல் கண்கள் கலங்கி பிரிந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top