Close
நவம்பர் 21, 2024 6:23 காலை

திருப்பதியில் இந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதி: தேவஸ்தானம் முடிவு

திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் இந்துக்களைத் தவிர, மாற்று மதத்தினரை விருப்ப ஓய்வு பெற அல்லது வேறு துறைகளுக்கு இடமாற்றம் கோரும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருமலையில் இனி இந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள திருப்பதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்த மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். பி.ஆர்.நாயுடு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டதிற்கு பிறகு பி.ஆர். நாயுடு கூறியுள்ளதாவது: இந்து கோவிலில் ஹிந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. இந்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேவஸ்தானம் கோவில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒன்று அவர்களாகவே விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம் அல்லது வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் கோரலாம். திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த ஹோட்டல் சட்டவிதிகளை மீறியது. அதனால் அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, திருப்பதியில் இந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top