Close
நவம்பர் 21, 2024 7:09 காலை

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ ‘ஜிசாட் என்2’ செயற்கைக்கோள்

இஸ்ரோவின் அதிநவீன ‘ஜிசாட் என்2’ தகவல் தொடர்பு செயற்கைக்கோள், எலான் மஸ்கிற்கு  சொந்தமான, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக பிரிவான, ‘நியூஸ்பேஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தின் ஜிசாட்24 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள், 2022, ஜூன் 23ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரோவும், ‘நியூஸ்பேஸ் இந்தியா’ நிறுவனமும் இணைந்து, ஜிசாட் என்2 என்ற புதிய அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளை தயாரித்தன.

இது, எலான் மஸ்கிற்கு சொந்தமான, அமெரிக்காவில் உள்ள ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் கேப் கனாவரெல் ஏவு தளத்தில் இருந்து, ‘பால்கன் 9’ ராக்கெட் உதவியுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

‘இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள், இந்தியா முழுதும், ‘பிராட்பேண்ட்’ சேவைகள் மற்றும் விமான தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும்’ என நியூஸ்பேஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறுகையில், ”இஸ்ரோவுக்கு சொந்தமான ஏவுதளத்தில், 4,000 கிலோ வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவும் வசதி உள்ளது. ஆனால், ஜிசாட் என்2 செயற்கைக்கோள் 4,700 கிலோ எடை கொண்டது. எனவே தான், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உதவியை நாடவேண்டி இருந்தது,” என்றார்.

இந்த செயற்கைக்கோளின் கண்காணிப்பை இஸ்ரோ கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுஉள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top