விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘இஸ்ரோ’ தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னேற்பாடாக, பல்வேறு கட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக வீரர்கள் பயணிக்கும் கலனை தனியாக விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக கடலில் தரை இறக்குவது, மீட்பு ஒத்திகை போன்ற பணிகளை இஸ்ரோ செய்து வருகிறது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது. வீரர்கள் இல்லாமல் , விண்கலனை மட்டும் விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலனை தயார் செய்யும் பணி இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, விண்வெளி வீரர்கள் இல்லாமல், வெறும் விண்கலனை மட்டும் சோதனை அடிப்படையில் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான முழுமையான விண்கலனை தயார் செய்யும் பணி, இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.
ககன்யான் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இஸ்ரோ தொடங்கியிருந்தது.
கடந்த 2014 டிசம்பர் 18ம் தேதி விண்கலன் ஒன்றை பூமியில் இருந்து 126 கிலோமீட்டர் உயரத்துக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் சோதனையை இஸ்ரோ செய்திருந்தது. அந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அதே நாளில், இன்று அடுத்த கட்ட சோதனைக்கு தயாராகி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வீரர்களுக்கான கலனை ஒருங்கிணைக்கும் பணி பெங்களூரு மையத்திலும், சர்வீஸ் மாட்யூல் எனப்படும் சேவை கலனை ஒருங்கிணைக்கும் பணி திருவனந்தபுரம் மையத்திலும் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.