Close
டிசம்பர் 19, 2024 5:56 மணி

மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி

மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான பிரச்னையை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே,நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சிகளின், ஐஎன்டிஐ கூட்டணி நோட்டீஸ் கொடுத்துள்ள விவகாரம், நாடு முழுதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிகழ்வுகள் நடந்திருந்தாலும், மாநிலங்களவை தலைவருக்கு எதிராக இப்போது தான் முதல் முறையாக நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்த தீர்மான நோட்டீசில், திரிணமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த, 60 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவைவில், பா.ஜ., தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.
இந்நிலையில் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானம் விளம்பரம் தேடும் நோக்கத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம் பெற்று இருந்ததாக கூறி ராஜ்ய சபா துணை தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.
மாநிலங்களவை தலைவர் பதவி வகிப்பவர், துணை ஜனாதிபதியாகவும் இருக்கிறார். அதனால், உயரிய பதவியின் நேர்மைக்கும், நிலைத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படுத்தவே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என பா.ஜ., எம்.பிக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top